எதிர்பார்ப்புகளை விஞ்சி சிங்கப்பூர் உற்பத்தித்துறை 16.6% வளர்ச்சி

எதிர்பார்ப்புகளை விஞ்சி சிங்கப்பூர் உற்பத்தித்துறை 16.6% வளர்ச்சி

படம்: ராய்ட்டர்ஸ்

26 Feb 2026 - 2:56 pm

1 mins read

ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டு ஜனவரி மாதம் சிங்கப்பூர் உற்பத்தித்துறை 16.6 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.

தொடர்ந்து ஐந்தாவது மாதமாக உற்பத்தித்துறை வளர்ச்சி கண்டது. மின்சாரப் பொருள்கள் துறையில் இடம்பெற்ற வளர்ச்சி அதற்கு முக்கியக் காரணம்.

பொருளியல் வளர்ச்சிக் கழகம் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த வளர்ச்சி விகிதம், புளூம்பர்க் கவனிப்பாளர்கள் கணித்திருந்த 12.1 விழுக்காட்டைவிட அதிகமாகும்.

உயிர்மருத்துவ உற்பத்தியைக் கருத்தில்கொள்ளாதபோது அவ்விகிதம் 24.1 விழுக்காடாக உள்ளது.

மாத அடிப்படையில் காலகட்டத்துக்கு ஏற்ப பல்வேறு அம்சங்களைக் கருத்தில்கொள்ளும்போது ஜனவரியில் உற்பத்தி 5.3 விழுக்காடு கூடியது. உயிரியல் மருத்துவ உற்பத்தி கருத்தில்கொள்ளப்படாதபோது விகிதம் 10.8 விழுக்காடாகப் பதிவானது.

பொது உற்பத்தி, உயிர்மருத்துவ உற்பத்தி ஆகியவற்றைத் தவிர ஜனவரியில் எல்லாப் பிரிவுகளிலும் ஆண்டு அடிப்படையில் வளர்ச்சி காணப்பட்டது.

மின்சார பாகங்கள், பகுதி மின்கடத்தி ஆகியவற்றில் பதிவான வளர்ச்சியால் மின்சாரப் பொருள்கள் பிரிவில் ஆக அதிகமாக, 44 விழுக்காடு உற்பத்தி வளர்ச்சி பதிவானது.

மின்சாரப் பொருள்கள் பிரிவில் அங்கம் வகிக்கும் பகுதி மின்கடத்தி உற்பத்தி 52 விழுக்காடு அதிகரித்தது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த தேவை வலுவாக இருப்பது அதற்கு முக்கியக் காரணம் என்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் குறிப்பிட்டது.

தகவல், தொடர்பு மற்றும் பயனீட்டாளர் மின்சாரப் பொருள்கள் துறையில் உற்பத்தி 5.2 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. அதேவேளை, கணினிப் பொருள்கள் மற்றும் தரவுச் சேகரிப்புத் துறையில் உற்பத்தி 6.3 விழுக்காடு சுருங்கியது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பகுதி மின்கடத்திஉற்பத்திவளர்ச்சிவர்த்தகம்