சிங்கப்பூர் ஒரு சாதாரண ஜனநாயகமாக மாறினால், சாதாரண செயல்திறனுடைய ஒரு சாதாரண நாடாக அது மாறுவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் எச்சரித்துள்ளார்.
அவ்வாறு நடந்தால், பொருளியல், கல்வி, வீட்டுவசதி, சுகாதாரம், உலகில் சிங்கப்பூரின் நிலைப்பாடு போன்றவற்றில் நமக்குப் பழகியுள்ள தரநிலையிலிருந்து அது மிகவும் மாறுபட்டதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
தெமாசெக் தொடக்கக்கல்லூரியில் மக்கள் செயல் கட்சி வியாழக்கிழமை (மே 1) நடத்திய பிரசாரக் கூட்டத்தின் முத்தாய்ப்பாக உரையாற்றிய திரு லீ, மலாய், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசினார்.
அவருடன் தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதி, தெம்பனிஸ் குழுத்தொகுதி ஆகியவற்றில் போட்டியிடும் மசெக வேட்பாளர்கள் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
“ஜனநாயக நாடுகளில் செயல்கள் எவ்வாறு தவறாகச் செல்லக்கூடும் என்பதற்கு உலகம் முழுவதும் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. நாமும் அந்தப் பாதையில்தான் செல்ல விரும்புகிறோமா?” என்று நிலையற்ற ஜனநாயகங்களின் ஆபத்துகளைச் சுட்டிக்காட்டிய திரு லீ கேள்வி எழுப்பினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு சிங்கப்பூர் கடந்து வந்த பயணத்தை நினைவுகூர்ந்த அவர், கொள்கை நிலைத்தன்மை, திறமையான தலைமைத்துவம், கடுமையான உழைப்பு முதலியவற்றின் விளைவாகவே சிங்கப்பூர் கடந்த 60 ஆண்டுகளில் தனித்துவமான முன்னேற்றம் அடைந்ததாகக் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்றுநோய்ப் பரவலின்போது சிங்கப்பூர் அதைச் சமாளிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளையும், பெரும் வளங்கள் இல்லாத ஒரு சிறிய நாடாக இருந்தும் சிங்கப்பூர் சிறப்பாகச் செயல்பட்டதையும் அவர் எடுத்துக்காட்டினார்.
தொடர்ந்து திறமையான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திரு லீ, சிங்கப்பூரின் தொடர்ச்சியான வெற்றிக்கு நல்லாட்சி மிக முக்கியமானது என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கல்வி, வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் சிங்கப்பூரின் மலாய்ச் சமூகத்தினர் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாகத் திரு லீ மலாய் மொழியில் உரையாற்றியபோது சொன்னார்.
“மலாய்ச் சமூகத்தினர் தொடக்கத்திலிருந்தே அரசாங்கத்தின் பன்முகத்தன்மை அடிப்படையிலான கொள்கைகளை ஆதரித்து வந்ததால்தான் இது அனைத்தும் சாத்தியமாகியுள்ளது. இதுவரை நீங்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை நாம் தொடர வேண்டும்.
“அனைத்து இன, சமயச் சமூகங்களுடனும், குறிப்பாகச் சிறுபான்மைச் சமூகங்களுடனும் தொடர்ந்து கூட்டாகச் செயல்பட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது மசெகவின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும்,” என்றார் அவர்.
குறிப்பாக, வாழ்க்கைச் செலவு, வீடமைப்பு, குடும்பப் பராமரிப்பு, ஓய்வூதியப் பாதுகாப்பு போன்ற முக்கிய கவலைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும் என்று மூத்த அமைச்சர் உறுதியளித்தார்.
“அரசாங்கம் உங்கள் கோட்பாடுகளையும் முன்னுரிமைகளையும் தேசியக் கொள்கைகளில் இணைத்து, உங்கள் கனவுகளை நிறைவேற்றும் வகையில் உங்களுடன் இணைந்து பணியாற்றும்,” என்றார் அவர்.
பொதுத்தேர்தலில் கடும் போட்டியை எதிர்ப்பார்க்கலாம் என்று கூறிய அவர், எதிர்கட்சியினர் அனைவரும் ஒரேமாதிரியாகப் பிரசாரம் செய்வதாகக் கூறினார்.
“மசெக நன்றாகச் செயல்படுகிறது. ஆனால், எங்களுக்குச் சிறிய எண்ணிக்கையில் நாடாளுமன்றத்தில் இடங்களைக் கொடுங்கள். நாங்கள் அவர்களை நன்கு கண்காணித்து, மேலும் சிறப்பாகச் செயல்படத் தூண்டுவோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்,” என்ற திரு லீ, சிங்கப்பூரர்கள் சிலர் இதை நம்புவதாகவும் சொன்னார்.
ஆனால், இதன் விளைவாக அனுபவம் வாய்ந்த மசெக அமைச்சர்களையும் மற்ற எதிர்காலத் தலைவர்களையும் இழக்க நேரிடலாம் என்றார் அவர்.
“இதனால், எதிர்காலச் சவால்களை வெல்லும் வாய்ப்பு குறையலாம் அல்லவா? வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பது, புதிய முதலீடுகளை ஈர்ப்பது, சிறந்த திட்டங்களை வகுப்பது, நமக்கான நல்ல எதிர்காலத்தை உருவாக்குவது, இவை அனைத்தும் இத்தேர்தலின் முடிவில்தான் அடங்கியுள்ளன,” என்று அவர் கூறினார்.
தாம் அரசியலில் சேர்ந்து 40 ஆண்டுகளாகியுள்ளன என்றார் திரு லீ.
“அந்த 40 ஆண்டுகளிலும், சிங்கப்பூரை ஒரு தனித்துவமான நாடாக மாற்றவும், தொடர்ந்து அதைத் தனித்துவமான நாடாக நிலைநாட்டவும் என்னால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளேன்,” என்றார் அவர்.
“என்னுடன் இணைந்து சிங்கப்பூரின் தனித்துவத்தை முடிந்தவரை நீட்டிக்கச் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்,” என்று கூறி மூத்த அமைச்சர் லீ தமது உரையை நிறைவுசெய்தார்.