நோன்புப் பெருநாளையொட்டி ஜோகூர் மன்னர் குடும்பம் தங்களின் மாளிகையைத் திறந்துவிட்டுள்ளது.
சிங்கப்பூர் அமைச்சர்களில் இருவர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி, கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஆகியோரையும் அவர்களின் மனைவிகளையும் ஜோகூர் ஆட்சியாளர் துங்கு இஸ்மாயில், அவரது மனைவி இருவரும் சனிக்கிழமை (மார்ச் 21) மதிய உணவு விருந்துக்கு வரவேற்றனர்.
இந்நிகழ்வு, ஆண்டுதோறும் சிங்கப்பூர் தலைவர்கள் கலந்துகொண்டுவரும் பாரம்பரிய நிகழ்வாகும்.
சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் நீண்டகாலமாக இருந்துவரும் எல்லை தாண்டிய உறவை திரு மசகோசும் திரு லீயும் மறுவுறுதிப்படுத்தியதாகவும் இருதரப்புக்கும் இடையே பல்வேறு அம்சங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு சனிக்கிழமை அறிக்கை மூலம் குறிப்பிட்டது.
அமைச்சர்கள் இருவரும் துங்கு இஸ்மாயில், அவரது மனைவி இருவருக்கும் தங்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர். ஜோகூர் பாருவில் உள்ள இஸ்தானா புக்கிட் சரீன் மாளிகையில் சிங்கப்பூர் அமைச்சர்களைத் தாம் வரவேற்றக் காட்சிகளைக் கொண்ட படங்களை துங்கு இஸ்மாயில் சனிக்கிழமை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

