தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2020க்குப் பிறகு முதன்முறையாக சிங்கப்பூர் நாணயக் கொள்கை தளர்த்தப்பட்டுள்ளது

2 mins read
மூலாதாரப் பணவீக்க விகித முன்னுரைப்பை ‘எம்ஏஎஸ்’ குறைத்துள்ளது
f8584f05-c247-4655-90d0-36fb5e46eca1
2025ஆம் ஆண்டுக்கான மூலாதாரப் பணவீக்க விகித முன்னுரைப்பைக் குறைத்துள்ள நிலையில் சிங்கப்பூர் நாணய ஆணையம் அதன் நாணயக் கொள்கையைத் தளர்த்தியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS), அதன் நாணயக் கொள்கை நிலைப்பாட்டைத் தளர்த்தியுள்ளது.

சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பைப் படிப்படியாக உயர்த்த இது உதவும்.

இந்த ஆண்டுக்கான மூலாதாரப் பணவீக்க விகிதம் முன்பு முன்னுரைக்கப்பட்டதைவிடக் குறையும் என்று எதிர்பார்ப்பதாக ஆணையம் சொல்லிற்று.

முக்கிய வர்த்தகப் பங்காளித்துவ நாடுகளின் நாணயங்களுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு விகிதம் குறைக்கப்படும் என்று ஜனவரி 24ஆம் தேதி ஆணையம் தெரிவித்தது. 2020 மார்ச் மாதத்திற்குப் பிறகு அது முதன்முறையாக சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பைத் தளர்த்தியுள்ளது.

ஆணையத்தின் அறிவிப்பை அடுத்து வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) காலை 8.54 மணியளவில் ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு கிட்டத்தட்ட 1.3560 ஆக இருந்தது.

உலகளாவிய, உள்நாட்டு நிலவரங்களை ஆணையம் அணுக்கமாகக் கண்காணிக்கும் என்றும் பணவீக்கம், பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றில் நேரக்கூடிய சிக்கல்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி மெதுவான வேகத்தில் 1 முதல் 3 விழுக்காடாக இருக்கும் என்று அரசாங்கம் ஏற்கெனவே தெரிவித்தது.

சென்ற ஆண்டின் நான்கு விழுக்காட்டு வளர்ச்சியைவிட இந்த ஆண்டு குறைவாகவே பதிவாகும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

புளூம்பெர்க் கருத்தாய்வில் கலந்துகொண்ட பொருளியல் வல்லுநர்கள் 17 பேரில் 11 பேர், சிங்கப்பூர் நாணய ஆணையம் வெள்ளிக்கிழமை அதன் நாணய மதிப்பைக் குறைக்கக்கூடும் என்று கருத்துரைத்திருந்தனர்.

முன்னதாக, 2021ஆம் ஆண்டு அக்டோபருக்கும் 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும் இடையே தொடர்ந்து ஐந்து முறை ஆணையம் சிங்கப்பூரின் நாணயக் கொள்கையைக் கடுமையாக்கியது. சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பை வலுவாக வைத்திருப்பது அதன் நோக்கம்.

பொருளியல் வளர்ச்சிக்கான எதிர்பார்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்த நாணய ஆணையம், “2024 அக்டோபரில் நடந்த கடைசி நாணயக் கொள்கை மதிப்பாய்விலிருந்து, உலகளாவிய பொருளியல் கொள்கையின் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது. இது முக்கியமாக வர்த்தகக் கொள்கை முரண்பாடுகள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கிறது,” என்று கூறியது.

குறிப்புச் சொற்கள்