தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘உலக வர்த்தகத்தின் போக்குக்கு ஏற்ப சிங்கப்பூர் தகவமைத்துக்கொள்ள வேண்டும் ’

2 mins read
ஜி20 உச்சநிலை மாநாட்டின் நிறைவில் பிரதமர் வோங்
3e83099d-d92c-415c-b7be-d811d8eee2eb
ரியோ டி ஜெனிரோவில் நிறைவுபெற்ற ஜி20 உச்சநிலை மாநாட்டிற்குப் பிறகு நவம்பர் 19ஆம் தேதி, பிரதமர் லாரன்ஸ் வோங் செய்தியாளர்களைச் சந்தித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, உலக வர்த்தகத்தின் தற்போதைய போக்குக்கு ஏற்றவகையில் சிங்கப்பூர் தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும். ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு, பன்முகத்தன்மைக்கான ஆதரவை வலுப்படுத்தும் வேளையில் இது அவசியம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

நவம்பர் 19ஆம் தேதி, ரியோ டி ஜெனிரோவில் நிறைவுபெற்ற ஜி20 உச்சநிலை மாநாட்டின் முடிவில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஆசியான் நாடுகளை மேலும் அணுக்கமாக்குவதும் இதர வட்டார அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வதும் முக்கியம் என்றார் அவர்.

லத்தீன் அமெரிக்க நாடுகளின் மெர்கோசர் கூட்டமைப்பை அவர் சுட்டினார்.

உலக வர்த்தக நடைமுறைகளின் மாற்றத்தால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் ஜி20 உச்சநிலை மாநாடு போன்ற அனைத்துலகச் சந்திப்புகளில் சிங்கப்பூரின் பங்களிப்பு ஏன் அவசியம் என்பது குறித்தும் பேசிய பிரதமர், “வர்த்தகம் தொடர்கிறது, ஆனால் அது மறுகட்டமைக்கப்படுகிறது,” என்றார்.

ஜி20 நாடுகளின் அமைப்பில் சிங்கப்பூர் உறுப்பியம் பெறவில்லை. இருப்பினும் அதன் சந்திப்புகளில் பங்குகொள்ள சிங்கப்பூருக்கு வழக்கமாக அழைப்பு விடுக்கப்படுகிறது.

நாடுகள் அவற்றுடன் நட்பார்ந்த முறையில் பழகுவோருடன் வர்த்தகம் செய்யவே விரும்புகின்றன என்றார் திரு வோங்.

அதேநேரத்தில், சார்ந்திருத்தலையும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலைமையையும் குறைத்துக்கொள்ள விரும்பும் நிலையில் வட்டார அமைப்புகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன என்றார் அவர்.

“இது உலகமயமாதலின் புதிய யுகம். புதிய வடிவம். இந்தப் புதிய வடிவத்தில் வர்த்தகத் தொடர்புகள் வட்டார அளவில் கூடுதலாக இடம்பெறுவது இயல்பாக இருக்கும்,” என்றார் பிரதமர்.

இதனால்தான் சிங்கப்பூருக்கு ஆசியான் அமைப்பு முக்கியமாகிறது என்று கூறிய அவர், முதலில் நாம் நமது வட்டாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

அதேவேளையில், ஜி20 போன்ற தளங்களும் சிங்கப்பூருக்கு மிகவும் முக்கியம். ஏனெனில், அனைத்துலக அரங்கில் கலந்துரையாடப்படும் அம்சங்கள் குறித்த நுண்ணறிவை அவை தருகின்றன என்று திரு வோங் சொன்னார்.

விரும்பிய பலன்கள் கிட்டாவிட்டாலும்கூட, என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதற்கேற்பத் தகவமைத்துக்கொள்ள இயலும் என்பதை அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்