தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலைத்த சோலையாக சிங்கப்பூர் திகழ வேண்டும்: துணைப் பிரதமர் ஹெங்

3 mins read
621ef3e4-45e5-4d9f-b5a5-af3f33b1d3f2
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி மசெக வேட்பாளர்களுடன் தொகுதி உலா மேற்கொண்டார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 4

நிச்சயமற்ற உலகச் சூழலில் சிங்கப்பூர் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய, நிலைத்திருக்கும் சோலைபோலத் திகழ வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி மக்கள் செயல் கட்சி வேட்பாளர்களுடன் புளோக்‌ 216 பிடோக்‌ ஈரச்சந்தை, உணவு நிலையத்தில் வியாழக்கிழமை (மே 1) பிற்பகல் தொகுதி உலா மேற்கொண்ட திரு ஹெங், செய்தியாளர்களிடம் பேசினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பிடோக் வட்டாரத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராகச் பணியாற்றிய திரு ஹெங், இந்தப் பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை. அரசியலிலிருந்து ஓய்வு பெறும் அவருக்குப் பதிலாக மசெக புதுமுகம் திரு தினேஷ் வாசு தாஸ் களமிறக்கப்பட்டுள்ளார்.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் தலைமையிலான ஈஸ்ட் கோஸ்ட் மசெக அணியில் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ், திருவாட்டி ஜெசிக்கா டான், திருவாட்டி ஹஸ்லினா அப்துல் ஹலிம் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

முன்னாள் சிக்லாப் நாடாளுமன்ற உறுப்பினரான பிரதமர் அலுவலக அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மானும் அவர்களுடன் சேர்ந்து வாக்கு சேகரித்தார்.

அனைவரும் மசெக துண்டுப் பிரசுரங்களைக் குடியிருப்பாளர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் விநியோகித்து மசெகவிற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

அணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு உறுப்பினரின் பலதரப்பட்ட திறன்களையும் அனுபவங்களையும் பாராட்டிய துணைப் பிரதமர் ஹெங், கொவிட்-19 தொற்றுநோய்ப் பரவலின்போது பிடோக் சமூக மன்றத்தில் முதல் தடுப்பூசி நிலையத்தை அமைத்த திரு தினேஷின் பங்களிப்புகளைச் சுட்டிக்காட்டினார்.

புதுமுகங்களையும் பழையமுகங்களையும் கொண்ட இந்த அணியை முழுமையாக ஆதரிக்கும்படி வாக்காளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

“பல குடியிருப்பாளர்கள் நான் இங்குச் செய்த பணிக்காக என்னிடம் வந்து நன்றிகூறினர். அவர்களிடம் நான் கூறியது என்னவென்றால், ‘நீங்கள் எனக்கு அளிக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசு, இந்த அணிக்கு நீங்கள் வழங்கும் வாக்கே’ என்பதுதான்,” என்றார் திரு ஹெங்.

சிங்கப்பூர் மட்டுமின்றி உலகமே பெரும்புயல்களை இன்று சந்தித்துவருகிறது என்று கூறிய அவர், வரிப் போர், வர்த்தகப் போர், தொழில்நுட்பப் போர் போன்றவற்றால் அனைவரும் மிகுந்த தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

சிங்கப்பூர்மீது விதிக்கப்பட்ட வரி 10 விழுக்காடு மட்டுமே எனினும் இது வட்டார விநியோகச் சங்கிலியையும் நமது பொருளியலையும் பேரளவில் பாதிக்கும் என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.

“செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியல் போன்ற துறைகளில் நாம் முதலீடு செய்ய வேண்டும். சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க, நம் மக்கள் அந்தத் தொழில்நுட்பங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வழங்க வேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான ஈஸ்ட் கோஸ்ட் திட்டத்தைப் பற்றி பேசுகையில், குடியிருப்பாளர்களின் கருத்து தமக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாகத் துணைப் பிரதமர் தெரிவித்தார்.

“சிறந்த யோசனைகள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவில்லை என்றால், அவற்றால் எந்தப் பயனும் இல்லை. நாம் இதுவரை மேற்கொண்ட மேம்பாடுகளை மக்கள் உணர்ந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. சிங்கப்பூரை மேலும் முன்னேற்றுவது, ஒவ்வொரு சிங்கப்பூரரின் பொறுப்பாகும்,” என்றார் அவர்.

தனிப்பட்ட எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, முதலில் ஓய்வெடுக்கப்போவதாகவும் அதன் பின்னர் சிங்கப்பூருக்குத் தாம் மேலும் என்ன செய்யலாம் என்பதை ஆராயத் திட்டமிட்டுள்ளதாகவும் துணைப் பிரதமர் ஹெங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்