தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிற நாடுகளின் குரலாகச் சிங்கப்பூர் இராது: சான் சுன் சிங்

2 mins read
c1de919b-8b44-4006-93b6-982fc8be9842
பெய்ஜிங்கில் நடைபெற்ற ‌‌‌ஷாங்சான் கருத்தரங்கில் பேசிய தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூர் மற்ற நாடுகளின் குரலாக எப்போதும் இருக்காது என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (செப்டம்பர் 18), சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற ‌‌‌ஷாங்சான் கருத்தரங்கில் பேசியபோது அமைச்சர் சான் இக்கருத்தைக் கூறினார்.

மற்ற நாடுகளின் குரலாக இருந்தால் சிங்கப்பூர் அதன் நம்பகத்தன்மையை இழக்க நேரிடும் என்று அவர் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூர் ஒரு நாட்டுடன் பொருளியல் பங்காளியாகவும் நல்ல நண்பராகவும் மட்டுமில்லாமல் உலக அளவில் ஒரு நம்பகமான பங்காளியாக விளங்க எண்ணுகிறது. அதற்குச் சிங்கப்பூரின் கருத்துகளும் கொள்கைகளும் நிலையானதாக இருப்பது முக்கியம்,” என்று அமைச்சர் சான் தெரிவித்தார்.

சீனாவுக்கு நான்கு நாள்கள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார் அமைச்சர் சான். அதன் ஒரு பகுதியாக அந்தக் கருத்தரங்கில் அவர் பேசினார்.

உலக ஒழுங்கு சீர்குலைவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கருத்தரங்கில் சான் பேசினார்.

“நிலையற்ற பொருளியல் சூழல் பாதுகாப்பு கட்டமைப்புகளில் நிச்சயமற்ற தன்மைகளை ஏற்படுத்தும், அதேபோல் பாதுகாப்புக் கட்டமைப்புகளில் நிச்சயமற்ற தன்மைகள் ஏற்பட்டால் நிலையற்ற பொருளியலை அது ஏற்படுத்திவிடும்,” என்று அவர் எச்சரித்தார்.

“பொருளியல் சுதந்திரம் மற்றும் உலகளாவிய ஒருங்கிணைப்பால் சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பல ஆண்டுகளாகப் பயன்பெற்றன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ஒருங்கிணைப்பில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன,” என்று திரு சான் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

“தற்போது சில நாடுகள் உள்ளூர் கட்டமைப்புகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுக்கின்றன. இது உலகளாவிய ஒருங்கிணைப்பில் தாக்கத்தைத் தருகிறது,” என்றார் திரு சான்.

ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் ‌ஷியாங்சான் கருத்தரங்கு தற்காப்பு அம்சங்கள்குறித்து பேசப்படும். அதில் அனைத்துலக அளவில் தற்காப்பு அதிகாரிகள், கல்விமான்கள், அமைப்புகள் கலந்துகொண்டனர்.

தற்காப்பு அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகச் சீனா சென்றார் திரு சான். செப்டம்பர் 15ஆம் தேதி அவரது அதிகாரத்துவப் பயணம் தொடங்கியது.

குவாங்டோங், பெய்ஜிங் இடங்களில் உள்ள ராணுவ நிலையங்களுக்கு அமைச்சர் சான் சென்றார். அங்குச் சீன நாட்டின் மூத்த தலைவர்களையும் ராணுவ அதிகாரிகளையும் அவர் சந்தித்துப் பேசினார்.

குறிப்புச் சொற்கள்