பருவநிலை மாற்றம், கரிம வெளியேற்றம் சார்ந்த பின்னடைவுகளைக் கொண்டிருக்கும் உலகை எதிர்கொள்ள சிங்கப்பூர் முன்கூட்டியே தயாராகவில்லை என்றால் அவற்றை ஈடுகட்ட கூடுதல் விலைகொடுக்க வேண்டியிருக்கும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் எச்சரித்துள்ளார்.
அத்துடன், பெரிய இடையூறுகளையும் சந்திக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வியாழக்கிழமை (பிப்ரவரி 26) நாடாளுமன்றத்தில் நடந்த அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது பருவநிலை சார்ந்த அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
அப்போது, உலகில் தீவிரமடைந்துவரும் பருவநிலை மாற்றங்கள், அவற்றின் தொடர்பில் சிங்கப்பூர் கையாள வேண்டிய அணுகுமுறைகள் குறித்து வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் பேசினார்.
பருவநிலை மாற்றங்கள் சார்ந்த செயல்பாடுகள் கடினமான மூன்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது என்று குறிப்பிட்ட அவர், அது குறித்து விவரித்தார்.
பருவநிலை மாற்றம் மோசமடைந்து வருகிறது என்றும் அது சிங்கப்பூரின் பொருளியல், சமூகத்தின் செயல்பாட்டுச் சூழலை வடிவமைக்கும் என்றும் சுட்டிய அவர், உலகளாவிய அளவில் கரிம வெளியேற்றத்தில் சிங்கப்பூரின் பங்கு ஏறத்தாழ 0.1 விழுக்காடு எனக் குறிப்பிட்டார்.
“தனியொரு நாடாகச் செயல்படுவதால் மட்டும் இந்த உலகளாவிய நெருக்கடியைத் தீர்க்க முடியாது, இருப்பினும், அனைத்துலகச் சமூகத்தின் பொறுப்பான அங்கமாக சிங்கப்பூர் தொடர்ந்து பங்காற்ற வேண்டும்,” என்று திரு கான் வலியுறுத்தினார்.
கரிம வெளியேற்றத்திற்கு ஒரு விலை உண்டு என்பதை அதற்கான வரி வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்ட திரு கான், அனைத்துலக அளவில் காணப்படும் நிலவரத்திற்கேற்ப சிங்கப்பூரின் கரிம வரி மதிப்பீடுகள் நிர்வகிக்கப்படும் என்றும் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
உலகளாவிய பருவநிலைச் சூழலைப் பொறுத்து, 2028ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய காலகட்டத்திற்கான கரிம வரி முன்னுரைப்புகளை பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சூரிய சக்திப் பயன்பாடு குறித்து வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்தபோது பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்ததை நினைவுகூர்ந்த திரு கான், 2030ஆம் ஆண்டிற்குள்ளாக அடைய வேண்டிய பயன்பாட்டு இலக்கு 3 கிகாவாட்டாக உயர்த்தப்படும் என்றும் கூறினார்.
2 கிகாவாட் எனும் சூரிய சக்தி சார்ந்த பயன்பாட்டு இலக்கை சிங்கப்பூர் நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்தைவிட முன்கூட்டியே எட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.
பருவநிலை மாற்றம் தொடர்பில் உள்ளூர் சார்ந்த தீர்வுகள் குறிப்பிட்ட வரையறைக்குள் இருப்பதால், அவ்விவகாரத்தில் அனைத்துலக அளவிலான ஒத்துழைப்புகளுடன் கூடிய தீர்வுகள் இன்றியமையாதது என்றும் துணைப் பிரதமர் கான் தெரிவித்தார்.

