ஆசியாவின் முன்னணி நிதி மையமாகத் திகழ்வதுடன், நம்பகமான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிதி மையமாகவும் தனது நிலையை சிங்கப்பூர் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
“எதிர்கால நிதி மையங்கள் நிலை சந்தை, சிறந்த உள்கட்டமைப்பு, வலுவான நிறுவனம் என்பதையெல்லாம் தாண்டி, ஏஐ தொழில்நுட்பத்தை எவ்வளவு பொறுப்புடனும் பாதுகாப்பாகவும் பயன்படுத்துகின்றன என்பதைக் கொண்டே மதிப்பிடப்படும்,” என்று டிபிஎஸ் வங்கியின் புதிய ஆய்வறிக்கை வெளியீட்டு விழாவில் புதன்கிழமை (மே 20) பேசிய அவர் இதனைக் குறிப்பிட்டார்.
‘நம்பகமான ஏஐ நிதி மையம்’ என்ற தலைப்பிலான அந்த ஆய்வில், உலகின் மிகச் சிறந்த 15 ஏஐ நிதி மையங்களில் சிங்கப்பூரும் இடம்பெற்றுள்ளது.
‘நம்பிக்கை’ பிரிவில் 20க்கு 19 புள்ளிகள் பெற்று சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. ‘திறனாளர்’ பிரிவில் நியூயார்க், சான் ஃபிரான்சிஸ்கோ நகரங்களுடன் ஒப்பிடுகையில், 15 புள்ளிகள் பெற்று சிங்கப்பூர் சற்று பின்தங்கியுள்ளது.
சிங்கப்பூர் பல ஆண்டுகளாக ஒருங்கிணைந்த நிர்வாகம், மின்னிலக்க உள்கட்டமைப்பை உருவாக்கியதே நம்பிக்கை பிரிவில் வலுவான மதிப்பெண் பெறக் காரணம் என்று டிபிஎஸ் குழுமத்தின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் விஷால் கபூர் கூறினார்.
அடுத்த கட்டமாக, ஏஐ ஆய்வு, ஃபின்டெக் (Fintech) கண்டுபிடிப்புகளில் திறனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஊழியர்களிடையே ஏஐ அறிவை ஆழமாக்கவும் தரவு நிர்வாகம், இணையப் பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அரசாங்கம் துணையாக இருக்கும் என்றார் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான்.
தொழில்நுட்ப மாற்றங்களால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு மறுதிறன் பயிற்சி, புதிய தொழில் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
முதலாளிகள் தங்களின் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதை போட்டி நன்மையாகக் கருத வேண்டும் என்று டிபிஎஸ் தலைமை நிர்வாகி டான் சு ஷானுடனான உரையாடலின்போது அவர் வலியுறுத்தினார்.
வேலை செயல்முறை, இடர் நிர்வாக அமைப்பு, செயல்பாட்டு மாதிரிகளில் ஏஐ ஒருங்கிணைக்கப்படும்போதே நிதித்துறையில் ஏஐ-ன் முழுப் பலனையும் உணர முடியும் என்றார் அவர்.
“சிங்கப்பூரின் பலம் அளவு சார்ந்தது அல்ல, பெரிய பொருளியல் நாடுகளைப்போல சிங்கப்பூரால் செலவு செய்ய முடியாது. ஆனால், உலக நிதிச் சவால்களுக்கு ஏஐ தீர்வுகளை உருவாக்கி, சோதித்து, செயல்படுத்தும் சிறந்த இடமாக சிங்கப்பூர் திகழ முடியும்,” என்று திரு கான் நம்பிக்கை தெரிவித்தார்.

