சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டு 2 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரை வளர்ச்சி அடையும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு முன்னுரைத்துள்ளது.
சிங்கப்பூர் நாணய ஆணையமும் ஜூலை 26ஆம் தேதியன்று இக்கருத்தை முன்வைத்தது.
இதற்கு முன்பு சிங்கப்பூரின் பொருளியல் 1 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரை ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இவ்வாண்டின் முதல் பாதியில் சிங்கப்பூர் பொருளியலின் நிலை, ஆக அண்மைய உலகளாவிய, உள்ளூர் பொருளியல் சூழ்நிலைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நாட்டின் பொருளியல் 2 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரை வளர்ச்சி அடையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.
2024ஆம் ஆண்டின் முதல் பாதியில், சிங்கப்பூர் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஆண்டு அடிப்படையில் சராசரியாக 3 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது.
அமைச்சு முன்னுரைத்ததைப் போலவே இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 2.9 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
முதல் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 3 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
காலாண்டு அடிப்படையில் பொருளியல் 0.4 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது.
தொடர்புடைய செய்திகள்
மொத்த விற்பனை, நிதி மற்றும் காப்புறுதி, தகவல் மற்றும் தொடர்பு ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி, இரண்டாம் காலாண்டில் பொருளியல் வளர்ச்சி அடைய முக்கிய காரணமாக இருந்ததாக அமைச்சு கூறியது.
இருப்பினும், உற்பத்தித்துறையின் வளர்ச்சி வீழ்ச்சி அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
உயிர்மருத்துவ உற்பத்தித்துறையின் வளர்ச்சி வெகுவாகக் குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மின்னுணுவியல் துறை மீண்டும் வளர்ச்சி அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
திறன்பேசிகள், கணினிகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த சில்லுகள் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்திருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஆனால், சில்லறை விற்பனை, உணவு, பானச் சேவைகள் போன்ற வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் துறைகள், உள்ளூர்வாசிகளின் வெளிநாட்டுப் பயணங்களின் அதிகரிப்பு காரணமாக அது சுருங்கியது.
இதற்கிடையே, சிங்கப்பூரின் வெளிப்புறத் தேவைக் கண்ணோட்டம் 2024ஆம் ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் மீட்சியுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வர்த்தக தொழில் அமைச்சு தெரிவித்தது.
2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சிங்கப்பூரின் உற்பத்தித் துறை படிப்படியாக மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோலிய ரசாயனங்கள் மற்றும் சிறப்பு ரசாயனங்கள் ஆகியவை அதிக அளவில் உற்பத்தியாவதால், ரசாயனத் துறை தொடர்ந்து விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு நேர்மாறாக, உயிர்மருத்துவ உற்பத்தி சுருங்க வாய்ப்புள்ளது, 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மருந்து உற்பத்தி பலவீனமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

