2030க்குள் சிங்கப்பூருக்கு மேலும் 3,000 தொண்டூழியர்கள் தேவை

2030க்குள் சிங்கப்பூருக்கு மேலும் 3,000 தொண்டூழியர்கள் தேவை

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Oct 2026 - 8:57 pm

2 mins read

இளையர்களுக்கு வழிகாட்டுவது முதல் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பது வரை பல்வேறு சேவைகளுக்கு 2030ஆம் ஆண்டுக்குள் இன்னும் 3,000 தொண்டூழியர்கள் தேவைப்படுகிறார்கள்.

தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் உதவுவதில் தொண்டூழியர்களின் பங்கைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு விரிவுபடுத்தி வரும் நிலையில், அவர்களுக்கான தேவை அடுத்தடுத்து அதிகரித்து வருகிறது.

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) நடைபெற்ற அமைச்சின் தொண்டூழியர்களுக்கும் பங்காளிகளுக்கும் விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, தொண்டூழியம் உருமாறி வருவதாகத் தெரிவித்தார்.

குறிப்பிட்ட இலக்குகளை நோக்கி தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் உதவுவது, அவர்களுடன் நீண்டகால உறவை வளர்த்துக்கொள்வது, பிற தொண்டூழியர்கள் மற்றும் திட்டங்களை முன்னின்று நடத்துவது போன்ற பொறுப்புகளைத் தொண்டூழியர்கள் அதிக அளவில் ஏற்றுக்கொள்வதாக அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

“உதாரணமாக, சிறுவர் சீர்திருத்த இல்லங்களில் முன்பு தோழர்களாக இருந்த தொண்டூழியர்கள் தற்போது வழிகாட்டிகளாக மாறியுள்ளனர்.

“அதனால், ஊழியர்களுடன் இணைந்து ஒவ்வோர் இளையரின் இலக்குகளையும் புரிந்துகொண்டு, அவர்களது சீர்திருத்தம் மற்றும் சமூகத்திற்குத் திரும்புவதற்கான கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதலை வழங்க முடிகிறது,” என்றார் அவர்.

சில அமைப்புகள் பெரிய அளவில் தொண்டூழியர்களைத் திரட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் மசகோஸ், தமது அமைச்சும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கிய திட்டத்தின்படி, 1,100க்கும் மேற்பட்ட என்யுஎஸ் மாணவர்கள் ‘காம்லிங்க் பிளஸ்’ குடும்பங்களுடன் இணைந்து தொண்டூழியர்களாகப் பணியாற்றி, 20,000க்கும் அதிகமான மணிநேரத்திற்குத் தொண்டூழியப் பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்றார்.

இத்தகைய முயற்சிகள், தொண்டூழியர்கள் நீண்டகாலம் தொடர்பில் இருப்பதையும் அவர்கள் ஆதரிக்கும் மனிதர்கள் மற்றும் லட்சியங்கள் மீது அதிகப் பொறுப்புணர்வை எடுத்துக்கொள்வதையும் காட்டுவதாக அவர் கூறினார்.

திட்டங்களை வழிநடத்தவும், புதிய தொண்டூழியர்களுக்கு வழிகாட்டவும் புதிய முயற்சிகளை உருவாக்க உதவவும் அனுபவம் வாய்ந்த தொண்டூழியர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றார் திரு மசகோஸ்.

அர்த்தமுள்ள மாற்றம் ஏற்பட சிறிது காலம் தேவைப்படும். அது எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் அமைவதில்லை என்று கூறிய அவர், நம்பகமான மனித உறவுகள் குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் பின்னடைவுகளைக் கடக்கத் தேவையான ஊக்கத்தையும் நிலைத்தன்மையையும் அளிக்கும் என்றார்.

குறிப்புச் சொற்கள்