சிங்கப்பூர்: தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் அந்நாட்டு தற்காப்பு அமைச்சரான ஜுடித் காலின்சை ஞாயிற்றுக் கிழமை அன்று சந்தித்துப் பேசினார்.
அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால, நெருக்கமான தற்காப்பு உறவு மறுவுறுதிப்படுத்தப்பட்டது.
நான்காவது சிங்கப்பூர்-நியூசிலாந்து தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு இருவரும் இணைந்து தலைமைத் தாங்கினர். அந்தக் கூட்டத்தில் இருதரப்பு தற்காப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
ஐந்து நாடுகளின் தற்காப்பு ஏற்பாடு, ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டம்-பிளஸ் போன்ற பலதரப்பு தளங்களில் இன்னும் எவ்வாறு சிறப்பாக செயல்படலாம் என்பது குறித்தும் அவர்கள் ஆராய்ந்தனர்.
நியூசிலாந்தில் சிங்கப்பூர் ஆயுதப்படை மேற்கொள்ளும் பயிற்சிக்கு அளிக்கப்படும் வலுவான ஆதரவுக்காக திருமதி ஜுடித் காலின்சுக்கு திரு இங் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
டாக்டர் இங்கின் நியூசிலாந்துப் பயணம் நெருக்கமான, நீண்டகால தற்காப்பு உறவைப் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்ட சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு, இரு அமைச்சர்களும் அனைத்துலக, வட்டாரப் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் தெரிவித்தது.
டாக்டர் இங், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்தோபர் லக்சனையும் சந்தித்துப் பேசினார்.

