தென்கிழக்காசியப் பழங்கதைகளை நினைவூட்டும் சிங்கப்பூர் இரவுத் திருவிழா 2026

தென்கிழக்காசியப் பழங்கதைகளை நினைவூட்டும் சிங்கப்பூர் இரவுத் திருவிழா 2026

படம்: ஹெரிட்டேஜ் எஸ்ஜி

16 Jul 2026 - 8:52 am

1 mins read

சிங்கப்பூரின் ஆகப் பெரிய இரவு அனுபவமான சிங்கப்பூர் இரவுத் திருவிழா 17வது முறையாகத் திரும்புகிறது.

‘புராணங்களும் இதிகாசங்களும்’ (Myths and Legends) என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இந்த இரவுத் திருவிழாவில், சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்காசியச் சமூகங்களை வடிவமைத்த பாரம்பரியக் கதைகள், கலைகள், மரபுகளைப் பொதுமக்கள் மீண்டும் கண்டறியலாம்.

‘ஹெரிட்டேஜ் எஸ்ஜி’ ஏற்பாட்டில் ஆகஸ்ட் 21ஆம் தேதிமுதல் செப்டம்பர் 5ஆம் தேதிவரை பிராஸ் பசா, பூகிஸ் வட்டாரத்தில் இரவுத் திருவிழா நடைபெறும்.

இவ்வாண்டு ஒரு புதிய அரும்பொருளக அங்கம் அறிமுகம் காண்கிறது. சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், சிங்கப்பூர்ச் சிறுவர் அரும்பொருளகம் மற்றும் சுற்றியுள்ள பாரம்பரிய இடங்களை அந்த அங்கம் மையமாகக் கொண்டிருக்கும்.

குறிப்பாக, சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகக் கட்டடத்தில் ஒளிபரப்பப்படும் ‘பூமி, கடலின் கதைகள்’ என்ற ஒளிக்காட்சியை வருபவர்கள் எதிர்பார்க்கலாம்.

ஃபோர்ட் கேனிங் பூங்காவழி இரவுநேர நடைபாதை அங்கத்தில் பங்கேற்பவர்கள், அதன் ஆழ்ந்த வரலாற்றை அறியும் ஒரு வாய்ப்பைப் பெறுவர்.

மேலும், முப்பரிமாண ஒளிப்பட வீச்சுப் போட்டி (MALAM Projection Mapping Competition) வழியாகத் தென்கிழக்காசியக் கலைஞர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்த இயலும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 20 படைப்புகள் கேத்தே கட்டடத்தில் ஒளிபரப்பப்படும்.

சிங்கப்பூர் இரவுத் திருவிழா 2026ல் நடைபெறும் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம். சிலவற்றுக்குக் கட்டணம் உண்டு.

கூடுதல் விவரங்களுக்கு https://www.heritage.sg/sgnightfest எனும் இணையத்தளத்தைப் பொதுமக்கள் நாடலாம்.

குறிப்புச் சொற்கள்