சிங்கப்பூர் நடுநிலையாக இருந்தது இல்லை: துணைப் பிரதமர் கான்

2 mins read
a0c28072-94c7-4479-ad55-f6992fcad4d0
யுபிஎஸ் ஆசியான் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார் துணைப் பிரதமர் கான் கிம் யோங். - படம்: யுபிஎஸ்

சிங்கப்பூர் நடுநிலையாக இருந்ததில்லை என்றும் கொள்கைகளிலும் அனைத்துலக விவகாரங்களிலும் எப்போதும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்றும் துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.

அவற்றுள் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விவகாரம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றம் என்ற அவர், அது கொந்தளிப்பான விவகாரமாக இருந்தாலும் சிங்கப்பூர் தொடர்ந்து விளிம்பில் இருக்க முடியாது என்றார்.

மே 22ல் நடந்த மாநாட்டுக் கூட்டத்தில் பேசிய துணைப் பிரதமர் கான், “நாம் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறோம். ஆனால் வித்தியாசம் என்னவென்றால் அமெரிக்காவுக்காகவோ சீனாவுக்காகவோ அந்த நிலைப்பாட்டை முடிவுசெய்வதில்லை. சிங்கப்பூருக்கும் சிங்கப்பூர் மக்களுக்கும் எது சிறந்ததோ அதன் அடிப்படையில்தான் நிலைப்பாட்டைத் தெரிவு செய்கிறோம்,” என்றார்.

வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான், அமெரிக்காவுடனும் சீனாவுடனும் வர்த்தகம் செய்வதை சிங்கப்பூர் மதிக்கிறது. இரண்டு நாடுகளுக்கும் அவற்றின் நிலை என்ன என்பது தெரியும். இருப்பினும் இருதரப்பையும் திருப்திபடுத்தும் வழியைக் கண்டறிவது தொடர்ந்து சிரமமாகவும் சவால்மிக்கதாகவும் மாறிவருகிறது என்றார் திரு கான்.

மே 12ஆம் தேதி அமெரிக்காவும் சீனாவும் ஒன்று மற்றதன் மீதான ஏற்றுமதிகள் மீது விதித்த வரிகளை 90 நாள்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டன. ஆனால் அந்த உடன்பாடு காலாவதியான பிறகு என்ன நடக்கும் என்பது இன்னமும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

ஆனால், வரி நெருக்கடியின் முடிவில் அனைத்தும் வழக்கம்போலதான் இயங்கும் என்பது உறுதியில்லை.

“அது ஒரு புது யுகமாக இருக்கப்போகிறது,” என்றார் திரு கான்.

வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து உள்நாட்டுத் தேவைகளை மையகமாகக் கொண்டுள்ளன என்றும் நாடுகள் தன்னைப்பேணித்தன போக்கை அதிகம் கடைபிடிப்பதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்க வரிகளைச் சமாளிக்க வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் உதவி செய்வதோடு புதிய பொருளியல் தளத்தில் நாட்டை முன்னிறுத்துவதற்கான வழிகளை ஆராய பொருளியல் மீள்திறன் பணிக்குழு ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கியது.

பணிக்குழுவுக்குத் தலைமை தாங்கும் திரு கான், புத்தாக்கத்தில் முதலீடு செய்வதிலும் புதிய வர்த்தகங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியிலும் மேம்பாட்டிலும் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தும் என்றார்.

சிங்கப்பூர் தொடர்ந்து அதன் மக்களில் முதலீடு செய்யவேண்டும் என்ற அவர், “உள்ளூர்த் திறனாளர்களை உருவாக்க ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு வர்த்தகமும் தொடர்ந்து முதலீடு செய்யவேண்டும்” என்றார்.

சிங்கப்பூர் தொடர்ந்து நீக்குப்போக்குடன் இருந்து துரிதமாகச் செயல்படத் தயாராக இருக்கவேண்டும் என்றும் துணைப் பிரதமர் கான் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்