அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் ஊடகம், முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கின் உறவினரான லீ ஷெங்வூ இடம்பெறும் காணொளி ஒன்றைக் கொண்டு தனது அக்கறைகளைப் பூர்த்தி செய்துகொள்வதாக சிங்கப்பூர் அரசாங்கம் சாடியுள்ளது என்று சிஎன்ஏ போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
‘அடக்கி ஆள்வது எவ்வாறு தொடங்குகிறது’ (How Tyranny Begins) என்ற தலைப்பைக் கொண்டுள்ள தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தும் அந்தக் காணொளி, அமெரிக்க அரசியலை விமர்சிக்கும் ஒன்று என அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் லுயி டக் இயூ, நியூயார்க் டைம்ஸ் ஆசிரியருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 26) அவர் அக்கடிதத்தை அனுப்பினார்.
“அரசாங்கத்தை எதிர்த்ததால் மோசமாக நடத்தப்பட்ட ஒருவர் என்ற போர்வையில் தவறான கண்ணோட்டத்தைத் தரும் திரு லீ ஷெங்வூவின் சித்திரிப்புகளைக் கொண்டு நீங்கள் சிங்கப்பூரை தொடர்புபடுத்துகிறீர்கள்,” என்றார் திரு லுயி.
“திரு லீ சிங்கப்பூருக்குத் திரும்ப, தடை விதிக்கப்படவில்லை. உங்கள் கட்டுரையில் இடம்பெறும் மற்ற சிலரைப்போல் அவர் சிறையில் அடைக்கப்படவும் இல்லை. அவரின் உடைமைகள் மீட்டுக்கொள்ளப்படவும் இல்லை. அவர் இன்னமும் சிங்கப்பூர் குடிமகனாகத்தான் இருக்கிறார். சிங்கப்பூர் கடப்பிதழைக் கொண்டு தொடர்ந்து சிக்கலின்றிப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்,” என்றும் திரு லுயி குறிப்பிட்டார்.
“அமெரிக்க உள்நாட்டு அரசியல் குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், உங்கள் அக்கறைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் நீங்கள் சிங்கப்பூரைத் தவறாகச் சித்திரித்தால் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிவரும்,” என்றும் அவர் சுட்டினார்.
தங்கள் நாடுகளில் அடக்குமுறை ஆட்சியால் பாதிக்கப்பட்டதாகக் கூறும் நால்வர், இம்மாதம் 22ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அந்த நியூயார்க் டைம்ஸ் காணொளியில் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் மூவர் ரஷ்யா, ஹங்கேரி, நிக்காராகுவா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றும் 39 வயது லீ ஷெங்வூ, திரு லீ சியன் லூங்கின் சகோதரரான திரு லீ சியன் யாங்கின் மகன் ஆவார்.

