நம்பிக்கையளிக்கும் பருவநிலை, நீடித்த நிலைத்தன்மைப் புத்தாக்கத் திட்டங்களை ஆய்வுக்கூடத்திலிருந்து சந்தைக்குக் கொண்டுவருவதற்கு உதவும் வகையில் $40 மில்லியன் நிதி தொடங்கப்பட்டுள்ளது.
‘நகரத் தீர்வு, நீடித்த நிலைத்தன்மை உருமாற்ற நிதி’ என்று அது வழங்கப்படுகிறது. வேளாண்-உணவு, கழிவு, நீர், நகரச் சுற்றுப்புறம் முதலிய துறைகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளை வர்த்தக வாய்ப்புகளாக உருவாக்குவது அதன் நோக்கம்.
“ஆய்வு, மேம்பாட்டுப் பணிகளில் தொடர்ந்து நிலவும் சவாலை நாம் கையாள வேண்டியுள்ளது. நம்பிக்கை தரும் ஆய்வுக்கும் அதனை வெற்றிகரமாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கும் உள்ள இடைவெளியே அந்தச் சவால். பொதுவாக மக்கள் இதனை மரணப் பள்ளத்தாக்கு என்று வர்ணிப்பர்,” என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார். நிதி பற்றியும் ஆய்வு தொடர்பான வேறுசில திட்டங்கள் குறித்தும் அவர் அறிவித்தார்.
ஆய்வு நிலையில் உள்ள பல நல்ல யோசனைகளை உலகில் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதில் பல தடைகள் இருப்பதாகத் திரு சீ குறிப்பிட்டார். தொழில்நுட்ப, கட்டுப்பாட்டு அல்லது வர்த்தகத் தடைகள் அவற்றுக்குக் குறுக்கே நிற்பதாக அவர் சொன்னார்.
நகரத் தீர்வு, நீடித்த நிலைத்தன்மை ஆய்வு, புத்தாக்க மாநாட்டின் தொடக்கநிகழ்ச்சியில் திரு சீ பேசினார். வியாழக்கிழமை (பிப்ரவரி 5) தொடங்கிய மாநாடு வெள்ளிக்கிழமை வரை சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு நிலையத்தில் நடைபெறும்.
“தொழில்நுட்ப உருமாற்றத்தில் முக்கியத் தடைகளைச் சமாளித்து முன்னேறுவதற்கு நிதி கைகொடுக்கும்” என்று திரு சீ கூறினார்.
தகுதிபெறும் திட்டங்கள், தேசிய முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே அரசாங்க நிதியுதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வுப் பணிகள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதையும் அவற்றை எவ்வாறு சந்தைக்குக் கொண்டுவரலாம் என்பதையும் அவை தெளிவாக விளக்க வேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் தெரிவித்தன. அந்த இரண்டு அமைச்சுகளுமே நிதியுதவியை அளிக்கின்றன.
ஐந்தாண்டில் 20 ஆய்வுத் திட்டங்கள் நிதியிலிருந்து பலன் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குளிர்ச்சியான சாயம், நீர்ச் சுத்திகரிப்புத் தொழில்நுட்பங்கள், திடீர்ப்பள்ளங்களை ஆராயும் திட்டம் முதலியவை அவற்றுள் சில.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் பல பில்லியன் வெள்ளி பெறுமான ‘ஆய்வு, புத்தாக்க, நிறுவனம் 2030’இன் கீழ்வரும் நான்கு முக்கிய அம்சங்களில் ஒன்று, நகரத் தீர்வு, நீடித்த நிலைத்தன்மை.
கரிம வெளியற்றத்தைக் குறைப்பதிலும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைக்கும் நாட்டின் ஆற்றலை வலுப்படுத்துவதிலும் அது கவனம் செலுத்துகிறது.

