சிங்கப்பூர், சுத்திகரிப்பு ஆலைகளுக்கும் பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களுக்கும் 2024, 2025ஆம் ஆண்டுகளுக்கான கரிம வரியில் 76 விழுக்காடு வரையிலான தள்ளுபடி வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செலவுச் சுமையைக் குறைத்து, போட்டித்தன்மையைக் கட்டிக்காக்க உதவுவது இதன் நோக்கம்.
சீனாவிலும் மத்திய கிழக்கிலும் உள்ள புதிய ஆலைகளுடனான போட்டி அதிகரிக்கும் வேளையில், சுத்திகரிப்பு ஆலைகளின் லாபமீட்டும் திறனுக்கு கரிம வரித் தள்ளுபடி கைகொடுக்கும்.
ஜனவரி 1ஆம் தேதி நடப்புக்கு வந்த, கரிம வெளியேற்றத்துக்கான புதிய வரியின்கீழ், ஆண்டுக்கு 25,000 டன்னுக்கு மேற்பட்ட கரிமத்தை வெளியேற்றும் நிறுவனங்கள், 2025ஆம் ஆண்டு வரை ஒரு டன்னுக்கு 25 வெள்ளி கரிம வரி செலுத்த வேண்டும். ஒப்புநோக்க, 2019 முதல் 2023ஆம் ஆண்டு வரை, அது ஒரு டன்னுக்கு 5 வெள்ளியாக இருந்தது.
2026, 2027ஆம் ஆண்டுகளில் ஒரு டன்னுக்கு 45 வெள்ளியும் 2030க்குள் ஒரு டன்னுக்கு 50 முதல் 80 வெள்ளி வரை கரிம வரி செலுத்த வேண்டும் என்று 2022ல் அரசாங்கம் அறிவித்திருந்தது.
சுத்திகரிப்புத் துறையில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு வரிச் சுமையைக் குறைக்க உதவும் நோக்கில், குறுகிய காலத்திற்கு ஒரு டன் கரிம வெளியேற்றத்துக்கு 6 முதல் 10 வெள்ளி கரிம வரி விதிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
முதலில் அவை ஒரு டன்னுக்கு 25 வெள்ளி வரியைச் செலுத்திவிட்டு, பின்னர் தள்ளுபடிக்கு விண்ணப்பிக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் மூன்று சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. அவை அன்றாடம் மொத்தம் 1.119 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிக்கின்றன.
இந்த ஆண்டும் (2024) அடுத்த ஆண்டும் கரிம வரித் தள்ளுபடி நடப்பில் இருக்கும் என்றும் 2026ஆம் ஆண்டிலோ அதற்குப் பிறகோ அதுகுறித்து மீண்டும் கலந்துரையாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

