போரால் பாதிப்படைந்துள்ள லெபனானில் ஜோர்தான் தலைமையில் அனைத்துலக நாடுகள் முன்னெடுத்துள்ள மனிதாபிமான உதவிப் பணிகளுக்கு சிங்கப்பூர் S$127,700 (US$100,000) நிதியை முன்மொழிந்துள்ளது.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை (ஏப்ரல் 23) வெளியிட்ட அறிக்கையில் இதன் விவரங்கள் வெளியிடப்பட்டன.
லெபனானில் நிகழ்ந்துவரும் மனிதாபிமான நிலவரத்தை சிங்கப்பூர் அரசாங்கம் அணுக்கமாகக் கவனித்து வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது. லெபனானுக்கு ஜோர்தான் அறிவித்துள்ள மனிதாபிமான உதவித் திட்டத்துக்கு சிங்கப்பூரின் நிதி வழங்கப்படுகிறது.
மருத்துவ உபகரணங்கள், உணவு, கூரையுடன் பாதுகாப்பான இடங்களை ஏற்படுத்தல், சுகாதாரத் தேவைகள் போன்ற பொதுமக்களுக்குத் தேவைப்படும் பலவற்றுக்கும் நிதி பயன்படும் என்று அமைச்சு விளக்கியது.
லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 2,400 பேர் கொல்லப்பட்டதாகவும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துவிட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலுக்கு எதிராக ஹிஸ்புல்லா போராளிகள் பதில் தாக்குதல் நடத்தியதால், மத்திய கிழக்குப் போரில் லெபனானும் சம்பந்தப்பட நேரிட்டது.
இஸ்ரேல், லெபனான் இருநாடுகளின் பத்துநாள் சண்டைநிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) நிறைவடைகிறது. அதனை நீட்டிக்க அவை மீண்டும் அமெரிக்காவில் புதன்கிழமை சந்திக்கவுள்ளன.
“பொதுமக்களுக்கும், அவர்களின் நலனுக்கான உள்கட்டமைப்புகளுக்கும் முன்னுரிமையும் பாதுகாப்பும் வழங்கி, நடப்பில் உள்ள சண்டை நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, நிரந்தர தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை நடத்தும்படி அனைத்துத் தரப்புகளையும் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அமைச்சு அதன் அறிக்கையில் கேட்டுக்கொண்டது.

