பெருஞ்செல்வந்தர்கள் அடிக்கடி வெவ்வேறு நாடுகளுக்கு இடமாற்றும் செய்து வரும் நிலையில் பலர் சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் செல்வதாக கோடீஸ்வரர்களின் தனியார் வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம், அமெரிக்க டாலர் 400 பில்லியன் (S$536 பி.) மதிப்பிலான கோடீஸ்வரர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் புலம்பெயர்ந்தனர். ஆக அதிக மதிப்பில் மத்தியக் கிழக்கும் ஆப்பிரிக்கப் பகுதியும் ஈர்த்ததாக ‘யுபிஎஸ் பில்லியனேர் எம்பிஷன்ஸ்’ அறிக்கை (UBS Billionaire Ambitions Report) குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரில் மட்டும் 47 கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களின் மொத்த செல்வத்தின் மதிப்பு அமெரிக்க டாலர் 155.5 பில்லியன் என்றும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.
கடந்த 2023ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் 41 கோடீஸ்வரர்கள் இருந்ததாகவும் அவர்களின் மொத்த செல்வத்தின் மதிப்பு அமெரிக்க டாலர் 135.8 பில்லியனாக இருந்ததாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
அனைத்துலக அளவில் 2,500க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்களின் செல்வ மதிப்பைக் கடந்த பத்தாண்டு காலமாகக் கண்காணித்துவரும் குழு இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, சிங்கப்பூரின் பெருஞ்செல்வந்தர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இருவர் சொந்த முயற்சியில் இந்நிலையை எட்டியவர்கள் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் 2015ஆம் ஆண்டு 17 கோடீஸ்வரர்கள் மட்டுமே இருந்தனர். அப்போது அவர்களின் மொத்த சொத்தின் மதிப்பு அமெரிக்க டாலர் 44.5 பில்லியனாக இருந்தது. தற்போது காணப்படும் வளர்ச்சி வேகம் மேலும் கணிசமான அளவில் இருப்பதை இது காட்டுகிறது.
அனைத்துலக அளவில் 2,682 கோடீஸ்வரர்கள் உள்ளனர். அவர்களில் 1,877 பேர் சுயமாக இந்நிலையை எட்டியவர்கள் என்றும் 805 பேர் தலைமுறை தலைமுறையாக கோடீஸ்வரர்களாக இருந்தவர்கள் என்றும் அறிக்கை தெரிவித்தது.