மெக்சிகோ சிட்டி: சிங்கப்பூருக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான வலுவான உறவைப் பிரதிபலிக்கும் விதமாக அடுத்த ஆண்டு (2026) மெக்சிகோ சிட்டியில் சிங்கப்பூர் தனது தூதரகத்தைத் திறக்க உள்ளது.
இதனை, மெக்சிகோ சென்றுள்ள அதிபர் தர்மன் சண்முகரத்னம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) அறிவித்தார்.
திரு தர்மன், மெக்சிகோவுக்கும் லத்தீன் அமெரிக்காவுக்கும் முதல் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளார்.
மெக்சிகோ தலைநகரில் உள்ள தேசிய அரண்மனையில் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாமுடன் இணைந்து அதிபர் தர்மன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
“தூதரகம் திறக்கும் முடிவு மெக்சிகோவின் எதிர்காலம் மீது சிங்கப்பூர் கொண்டிருக்கும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
“மேலும், தூதரக உறவின் மூலம் மெக்சிகோவின் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் வர்த்தகங்களையும் கலாசார சமூகத்தையும் துடிப்புடனும் ஆழமாகவும் சிங்கப்பூர் நாடமுடியும்,” என்று திரு தர்மன் தெரிவித்தார்.
ஸ்பானிய மொழியில் பேசிய அதிபர் ஷீன்பாம், மெக்சிகோவில் சிங்கப்பூர் தனது தூதரகத்தைத் திறக்கும் செய்தி தமக்கு உற்சாகம் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூருக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் இரண்டு புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்திடும் சடங்கை திரு தர்மனும் திருவாட்டி ஷீன்பாமும் பார்வையிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
மெக்சிகோவில் அமையும் தூதரகம் ஸ்பானிய மொழி பேசும் உலகின் முதல் சிங்கப்பூர்த் தூதரகமாக அமையும். அத்துடன், லத்தீன் அமெரிக்காவின் இரண்டாவது தூதரகமாகவும் அது இருக்கும்.
கடந்த 2012ஆம் ஆண்டு லத்தீன் அமெரிக்காவின் பிரேசிலில் சிங்கப்பூர் தனது தூதரகத்தைத் திறந்தது.
ஆப்பிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் அடுத்த சில ஆண்டுகளில் சிங்கப்பூர் தனது தூதரகத்தைத் திறக்கும் என்று கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்திருந்தார்.
அந்த வகையில், வரும் 2027ஆம் ஆண்டு எத்தியோப்பியாவில் சிங்கப்பூர்த் தூதரகம் அமையும் என்று நவம்பர் மாதம் அவர் தெரிவித்தார்.

