இந்தியா உள்ளிட்ட வட்டார நாடுகளிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்வதற்கான சாத்தியத்தை சிங்கப்பூர் வரவேற்பதாக எரிசக்தி சந்தை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவும் சிங்கப்பூரும் அவற்றின் மின்சாரக் கட்டமைப்பை இணைக்க முயன்றுவருவதாக வெளிவந்துள்ள தகவல்கள் குறித்து ஆணையத்திடம் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ வினவியதைத் தொடர்ந்து இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.
ஜூலை 30ஆம் தேதி ‘எக்கானமிக் டைம்ஸ்’ வெளியிட்ட அறிக்கையில், அந்த இரண்டு நாடுகளும் அவற்றின் மின்சாரக் கட்டமைப்பை கடலடிக் கம்பிவடம் மூலம், அந்தமான், நிக்கோபார் தீவுகள் வழியாக இணைக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தியா புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை சிங்கப்பூருக்கு விற்க அது வகை செய்யும்.
அத்தகைய நடவடிக்கையை நிபுணர் குழு ஒன்று ஆராய்வதாக இந்திய அரசாங்க அதிகாரி ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.
இந்திய மின்சாரக் கட்டமைப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் அக்குழுவில் அடங்குவர். அவர்கள் இவ்வாண்டின் பிற்பகுதியில் இந்த விவகாரத்தின் தொடர்பில் கலந்துபேச சிங்கப்பூர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா உள்ளிட்ட வட்டார நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குள் 4 கிகாவாட் மின்சாரத்தை தருவிப்பதற்கான முன்மொழிவுகளை வரவேற்பதாக எரிசக்திச் சந்தை ஆணையம் கூறியது.
இந்த வட்டாரத்தில் உள்ள நாடுகளிலிருந்து மின்சாரத்தை தருவிக்க கடந்த மே மாதம் 20க்கும் மேற்பட்ட முன்மொழிவுகளைப் பெற்றதாக ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியது.

