சிங்கப்பூருக்கும் பராகுவேக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) நடப்புக்கு வந்தது என்று சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
மெர்க்கோசுர் எனும் தென் பொதுச் சந்தை அமைப்பை அர்ஜென்டினா, பிரேசில், பராகுவே, உருகுவே ஆகிய நாடுகள் நிறுவின. அந்த அமைப்பின் உறுப்பு நாடு ஒன்றுடன் சிங்கப்பூர் செய்துகொள்ளும் முதல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அது.
மெர்க்கோசுர்-சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சிங்கப்பூரின் அத்தகைய 29வது உடன்பாடு. அந்த அமைப்பு, தென்கிழக்காசிய நாடு ஒன்றுடன் செய்துகொண்ட முதல் வர்த்தக ஒப்பந்தமும் அதுவே.
அதன்கீழ், சிங்கப்பூருக்கும் உருகுவேக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் மார்ச் முதல் தேதி நடப்புக்கு வரும் என்று அமைச்சு தெரிவித்தது.
அர்ஜென்டினா, பிரேசில் ஆகியவற்றுடனான ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் நடைமுறைகள் தற்போது நடைபெறுகின்றன.
“சிங்கப்பூருக்கும் தென்னமெரிக்காவின் நான்கு நாடுகளுக்கும் இடையிலான பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே மெர்க்கோசுர்-சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் நோக்கம். வரி விகிதங்களைக் குறைப்பதன் மூலமும் வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிப்பதன் மூலமும் அதனைச் செய்யமுடியும்,” என்று அமைச்சு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அந்த நான்கு நாடுகளிலும் சிங்கப்பூர் வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் வணிகம் செய்வதற்கு உகந்த சூழலை ஒப்பந்தம் ஏற்படுத்தித்தரும் என்று நம்பப்படுகிறது. அவற்றின் கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு, கிட்டத்தட்ட 3 டிரில்லியன் அமெரிக்க டாலர் ($3.8 டிரில்லியன்). நான்கு நாடுகளின் மொத்த மக்கள்தொகை 295 மில்லியனுக்கும் அதிகம்.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஏறக்குறைய 200 நிறுவனங்கள், ஏற்கெனவே அர்ஜென்டினா, பிரேசில், பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளில் செயல்படுகின்றன. எண்ணெய், எரிவாயு, வேளாண், மின்னிலக்கத் தீர்வுகள், உற்பத்தி, விருந்தோம்பல், தளவாடம், உள்கட்டமைப்பு முதலிய துறைகளில் அவை வணிகம் செய்கின்றன.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான சமரசப் பேச்சுகள் 2018ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கின.
நான்காண்டுக்குப் பிறகு ஒப்பந்தம் 2022ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
பின்னர் 2023, டிசம்பர் 7ஆம் தேதி அதில் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் நான்கு நாடுகளின் அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.

