தொடர்ந்து முதல்நிலையில் கோலோச்சும் சிங்கப்பூர் கடப்பிதழ்

2 mins read
c1b08f3d-ca8e-4539-8916-27cdd1a3a17f
சிங்கப்பூர் கடப்பிதழைக் கொண்டு 193 இடங்களுக்கு விசா இன்றிச் செல்லலாம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் உலகின் ஆகச் சக்திவாய்ந்த கடப்பிதழ்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூரர்கள் உலக அளவில் 227 இடங்களில் 193க்கு விசா இன்றிச் செல்லலாம் அல்லது அங்குச் சென்றவுடன் விசா பெற்றுக்கொள்ளலாம். செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) வெளியிடப்பட்ட ஆக அண்மை ஹென்லீ கடப்பிதழ்க் குறியீட்டில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

சிங்கப்பூர் கடப்பிதழை வைத்திருப்பவர்கள் 195 இடங்களுக்கு அவ்வாறு செல்லமுடியும் என்று இவ்வாண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட குறியீடு குறிப்பிட்டது.

பாகிஸ்தானும் மேற்கு ஆப்பிரிக்க நாடான மோரிட்டானியாவும் மின் விசா முறைக்கு மாறியதால் சிங்கப்பூர் கடப்பிதழைக் கொண்டு விசா இன்றி அங்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

பயணிகள் மின்-விசாவுக்கான ஒப்புதலைப் புறப்படுவதற்கு முன்னர் பெற்றாகவேண்டும்.

அதனால் பட்டியலில் முன்னணியில் இருந்த மற்ற நாடுகளும் பாதிக்கப்பட்டன.

ஜப்பானும் தென்கொரியாவும் இரண்டாம் இடத்தில் வந்தன. அந்த நாடுகளின் குடிமக்கள் 190 இடங்களுக்கு விசா இன்றிப் போகலாம்.

மூன்றாம் நிலையை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏழு நாடுகள் பகிர்ந்துகொண்டன. டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் ஆகியவையே அந்த நாடுகள்.

அமெரிக்காவும் பிரிட்டனும் பட்டியலில் தொடர்ந்து சரிவைச் சந்தித்தன. பத்தாண்டுகளுக்கு முன்னர் அவை உலகின் சக்திமிக்க கடப்பிதழாகத் திகழ்ந்தன. 2015ல் பிரிட்டனும் 2014ல் அமெரிக்காவும் பட்டியலின் முதலிடத்தில் இருந்தன. ஆனால் இப்போது அவை முறையே ஆறாம் இடத்திலும் பத்தாம் இடத்திலும் உள்ளன.

பிரிட்டன் கடப்பிதழின் மூலம் 186 இடங்களுக்கும் அமெரிக்க கடப்பிதழின் வழி 182 இடங்களுக்கும் விசா இன்றிப் போகலாம்.

பட்டியலின் கடைசியில் 99ஆம் நிலையில் ஆஃப்கானிஸ்தான் உள்ளது. அந்நாட்டுக் குடிமக்கள் 25 இடங்களுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்லமுடியும்.

சிரியா 98வது நிலையிலும் ஈராக் 97வது நிலையிலும் வந்தன.

கடந்த ஆறு மாதங்களில், பட்டியலில் ஆக அதிக இடங்கள் முன்னேறியது இந்தியா. 85வது நிலையிலிருந்து 77க்கு அது உயர்ந்தது. இந்தியக் கடப்பிதழைக் கொண்டு 59 இடங்களுக்கு விசா இன்றிச் செல்லலாம்.

அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஹென்லீ & பார்ட்னர்ஸ் நிறுவனம் பட்டியலைத் தயாரித்தது.

ஆண்டுதோறும் ஜனவரி, ஜூலை மாதங்களில் பட்டியல் வெளியிடப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்