காஸாவில் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்த குற்றத்திற்காக, மியன்மார் நாட்டவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான 23 வயது ஆடவர்மீது புதன்கிழமை (ஜூலை 29) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படவுள்ளது.
உள்துறை அமைச்சு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தது. ராணுவ உபகரணங்களை வாங்க இணையத்தில் நன்கொடை திரட்டிய வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, 2024 ஆகஸ்ட்டில் அந்த ஆடவர் பணம் அனுப்பியதாக உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவின் விசாரணையில் தெரியவந்தது.
குடிமக்கள் உட்பட அனைத்துப் பாலஸ்தீனர்களையும் துடைத்தொழிக்கும் நோக்கில் காஸா சிட்டியில் பயங்கரவாதச் செயலை மேற்கொள்வதற்காகவே அந்த உபகரணங்கள் வாங்கப்படுவதாக அவர் நம்பினார்.
இவ்வழக்கு வணிகக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வெளிநாட்டு நபரால் நியமிக்கப்பட்ட பேபால் கணக்குகளுக்கு அந்த ஆடவர் 72.28 அமெரிக்க டாலரை (S$93) அனுப்பியதும் மேலும் ஒரு டாலரை அனுப்ப முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதைத் தடுக்கும் சட்டத்தின்கீழ், தொகையின் அளவு எவ்வளவாக இருந்தாலும், பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவது குற்றமாகும். இக்குற்றத்திற்கு $500,000 வரை அபராதம், 10 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அந்த ஆடவரின் தீவிரவாத இணையப் பதிவுகள் குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது. இணையவழித் தீவிரவாதக் கருத்துகளை உள்வாங்கியதால் அவர் தீவிரவாதப் போக்கிற்கு ஆளானது தெரியவந்தது.
2023 அக்டோபர் 7ல் இஸ்ரேல்மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகள் பக்கம் கவனத்தைத் திருப்பிய அவருக்கு, 2024ல் முஸ்லிம்கள்மீது கடுமையான வெறுப்பு ஏற்பட்டது.
யூதர்களுக்கு மட்டுமே பூமி சொந்தமானது என்றும் பாலஸ்தீன முஸ்லிம்களைக் கொல்வது நியாயமானது என்றும் அந்த ஆடவர் நம்பினார்.
பின்னர் 2025 தொடக்கத்தில், தீவிர வலதுசாரிப் பதிவுகளை உள்வாங்கிய அவருக்கு யூதர்கள் மீதும் வெறுப்பு உண்டானது. முஸ்லிம்கள், யூதர்கள், ஐரோப்பியக் குடியேறிகள், பாலினச் சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் பதிவுகளை அவர் வெளியிட்டார்.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வோர் அல்லது அவற்றை ஆதரிப்போர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.

