காஸாவில் பயங்கரவாதச் செயல்களுக்கு உதவ $93 அனுப்பியதாகச் சிங்கப்பூர் நிரந்தரவாசிமீது குற்றச்சாட்டு

காஸாவில் பயங்கரவாதச் செயல்களுக்கு உதவ $93 அனுப்பியதாகச் சிங்கப்பூர் நிரந்தரவாசிமீது குற்றச்சாட்டு

2 mins read
635288df-83f1-442e-a7c7-101ed6cfbd19
23 வயது சா ரியான் தூ மீது பயங்கரவாத நோக்கங்களுக்கு ஆதரவாய்ப் பணம் வழங்கியதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காஸாவில் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியளிப்பதற்காகப் பணம் அனுப்பியதாகக் கூறப்படும் ஒருவர்மீது புதன்கிழமை (ஜூலை 29) மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

23 வயது சா ரியான் தூ மீது பயங்கரவாத நோக்கங்களுக்கு ஆதரவாய்ப் பணம் வழங்கியதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

மியன்மாரைச் சேர்ந்தவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான இவர், 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி பிராட்லி சேன்ஸ்பரி என்பவருக்குச் சொந்தமான பேபால் கணக்கிற்கு US72.28 (S$93) அனுப்பியதாகக் கூறப்படுகிறது. காஸா நகரில் பயங்கரவாதச் செயலுக்கு உறுதுணையாய் இருப்பதற்காக அந்த நிதி கொடுக்கப்பட்டது.

அதே காரணத்துக்காக, 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி மெரிடித் பாலிக் என்பவருக்குச் சொந்தமான மற்றொரு பேபால் கணக்கிற்கு மேலும் US$1 அனுப்ப அவர் முயன்றதாகவும் கூறப்படுகிறது. அவரின் நன்கொடை ராணுவ உபகரணங்களை வாங்கப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் குழு தாக்குதல்களை நடத்தியது. அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்துகளைப் பார்த்ததால், சா ரியான் தூவுக்கு 2024ல் முஸ்லிம்கள்மீது தீவிர வெறுப்பு ஏற்பட்டது என்று உள்துறை அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சமூக ஊடகங்களில் வலசாரித் தீவிரவாத, யூத எதிர்ப்புக் கருத்துகளைப் பார்த்ததைத் தொடர்ந்து, அவருக்கு யூதர்கள் மீதும் கடுமையான வெறுப்பு உருவானது.

நீதிமன்ற விசாரணையின்போது, சா ரியான் தூ பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவார் எனக் கூறி, அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் அவருக்குப் பிணை வழங்கக் கூடாது என்று கோரினார்.

நீதிபதி, ஏதேனும் கூற விரும்புகிறீர்களா என்று சா ரியான் தூவிடம் கேட்டார். தமக்குச் சமூகப் பதற்றம் இருப்பதாகக் கூறிய சா ரியான் தூ, தம்மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று கூறினார்.

அவருக்குப் பிணை வழங்கப்படவில்லை; மேலும் அவர் காவலில் வைக்கப்பட்டார். அவரின் வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 21ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

பயங்கரவாத நோக்கங்களுக்காகப் பணம் கொடுத்ததன் தொடர்பில் குற்றவாளியாக நிரூபிக்கப்படுவோருக்கு $500,000 வரை அபராதம் அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்நிரந்தரவாசிபயங்கரவாதம்நடவடிக்கைகாஸாகுற்றச்சாட்டு