தங்க வர்த்தக மையமாக விளங்க சிங்கப்பூர் திட்டம்

தங்க வர்த்தக மையமாக விளங்க சிங்கப்பூர் திட்டம்

படம்: ராய்ட்டர்ஸ்

27 Mar 2026 - 3:44 pm

2 mins read

தங்க வர்த்தகத் தளம் என்ற சிங்கப்பூரின் நிலையை மேலும் மேம்படுத்தத் திட்டங்கள் வரையப்பட்டுள்ளன.

மதிப்புமிக்க உலோகங்களைச் சேமிப்பதிலும் அவற்றின் வர்த்தகத்தில் ஈடுபடுவதிலும் இங்கு முதலீட்டாளர்களிடையே அக்கறை அதிகரித்துவரும் நிலையில் இத்திட்டங்கள் வரையப்பட்டுள்ளன. பெரிய தங்கக் கட்டிகளை நேரடியாக வாங்குவதற்கு வகைசெய்யும் சரிபார்ப்பு முறையை அமைப்பது போன்ற நடவடிக்கைகள் திட்டங்களில் அடங்கும்.

லண்டன் சந்தையைப் பொறுத்தவரை 400 ட்ராய் அவுன்ஸ் அல்லது சுமார் 12.4 கிலோகிராம் எடைகொண்டவையே பெரிய தங்கக் கட்டிகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

ஒரு கிலோகிராம் எடைகொண்ட கிலோபார் கட்டிகளைக் கொண்டு வர்த்தகத்தில் ஈடுபடுவதே ஆசியச் சந்தைகளில் விரும்பப்படுகிறது. எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில், தற்போதே நிர்ணயிக்கப்பட்ட விலையில், ஒரு குறிப்பிட்ட அளவு தங்கத்தை வாங்குவதற்கோ விற்பதற்கோ இரு தரப்பினருக்கு இடையே செய்துகொள்ளப்படும் சட்டப்பூர்வ ஒப்பந்தம் எனும் வகையில் (gold futures contracts) அமெரிக்காவின் கோமெக்ஸ் (Commodity Exchange)  பரிவர்த்தனைச் சந்தையிலும் அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

சிங்கப்பூர் நாணய ஆணையம், சிங்கப்பூர் விலையுயர்ந்த உலோக வர்த்தகச் சந்தைச் சங்கம் (Singapore Bullion Market Association) இரண்டும் சிங்கப்பூரைத் தங்க வர்த்தக மையமாக மிளிரச் செய்வதற்கான திட்டங்களை வெள்ளிக்கிழமை (மார்ச் 27) வெளியிட்டன. சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தோருடன் ஆலோசனை நடத்திய பிறகு திட்டங்கள் வெளியிடப்பட்டன.

கடந்த ஜனவரி மாதம் அமைக்கப்பட்ட செயற்குழுவில் இருப்போருடன் அந்த ஆலோசனை நடத்தப்பட்டது. அக்குழுவில் டிபிஎஸ் வங்கி, ஐசிபிசி ஸ்டாண்டர்ட் வங்கி, ஜேபி மோர்கன் சேஸ் வங்கி, யுபிஎஸ், யுஓபி வங்கி, சிங்கப்பூர் பங்குச் சந்தைக் குழுமம், உலகத் தங்க மன்றம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஸ்டான்எக்ஸ் ஏபெக், ஒய்எல்ஜி புல்லியன் சிங்கப்பூர் ஆகிய வர்த்தகத் தளங்கள் உள்ளிட்டவையும் செயற்குழுவில் இடம்பெற்றுள்ளன.

வெளிநாட்டு மத்திய வங்கிகளுக்கும் நாடுகள் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கும் ‘வால்ட்டிங் சர்விசஸ்’ (vaulting services) எனப்படும் மிகுந்த பாதுகாப்புடன் தங்கத்தை வைத்துக்கொள்ள வகைசெய்யும் சேவையை வழங்குவது குறித்தும் ஆராயப்படுவதாகச் சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்தது. இதன்படி தங்கம், ஆணையத்தின் சொந்த ‘வால்ட்’ வசதியில் வைத்துக்கொள்ளப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

துபாய், ‌ஷாங்காய், ஹாங்காங் ஆகியவற்றின் வரிசையில் ஆசியாவின் நம்பகமான தங்க வர்த்தக மையமாகச் சிங்கப்பூரை திகழச் செய்யும் நோக்கில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்தங்கம்உலகம்வர்த்தகம்