அனைத்துலகக் குற்றவியல் காவல்துறை அமைப்பு (இன்டர்போல்) உலக அளவில் நடத்திய திடீர் சோதனையில், ஆட்கடத்தலுக்கு உள்ளாகி மற்றவர்களை ஏமாற்ற மோசடி நிலையங்களில் வலுக்கட்டாயப்படுத்தப்பட்டு வேலை செய்யும் நிலைக்குப் பலர் தள்ளப்பட்டது கண்டறியப்பட்டது.
இது, வழக்கமான ஆட்கடத்தல் போக்கிலிருந்து வேறுபடுவதாக இன்டர்போல சொன்னது.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி, துன்புறுத்தி மோசடி நிலையங்களில் அவர்களை மோசடிக் கும்பல்கள் அடைத்து வைக்கின்றனர்.
இன்டர்போல் நடத்திய அதன் ஆகப்பெரிய சோதனை நடவடிக்கையில் (Operation Liberterra II), ஆட்கடத்தலுக்கு ஆளாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் 3,222 பேரை தான் மீட்டதாகத் தெரிவித்தது.
செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை மொத்தம் 116 நாடுகளிலும் பிரதேசங்களிலும் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் 2,517 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 800க்கும் அதிகமானோரின் கைது நடவடிக்கை, ஆட்கடத்தல் தொடர்பிலானவை.
இந்தச் சோதனை நடவடிக்கையில் சிங்கப்பூர் பங்குபெற்றதை இன்டர்போல் உறுதிப்படுத்தியது. ஆனால் சிங்கப்பூர் காவல்துறையின் பங்கு குறித்த மேல்விவரங்களை அது வெளியிடவில்லை.
ஆட்கடத்தலுக்கு ஆளானோரைக் கொண்டு இணைய மோசடி நிலையங்களைக் குறிவைப்பதே தன் செயல்பாட்டின் முன்னுரிமை எனக் கூறிய இன்டர்போல், இந்த உலகளாவிய போக்கு குறித்து சிங்கப்பூர் உள்ளிட்ட அதன் உறுப்பு நாடுகளை எச்சரித்தது.
தொடர்ந்து லாபம் பெறும் நோக்கில், குற்றவியல் கும்பல்கள் ஆடவர்கள், மாதர்கள், சிறுவர்களைப் பலமுறை தவறாக நடத்துவதாக இன்டர்போல் தலைமைச் செயலாளர் யர்கன் ஸ்டோக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தச் சோதனை நடவடிக்கையின் முடிவுகள் முதற்கட்டமானவை என்றாலும், சட்ட அமலாக்கம் எதிர்நோக்கும் சவாலின் பரந்த அளவை இவை கோடிட்டுக் காட்டுகின்றன. ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் மட்டுமே இத்தகைய மிரட்டல்களை எதிர்கொள்ள முடியும்,” என்றார் அவர்.
அந்தந்த நாட்டு அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறாமல், எல்லைகளைக் கடந்த 17,700க்கும் அதிகமான குடியேறிகளும் இந்த நடவடிக்கையின்போது அடையாளம் காணப்பட்டனர்.
உலகம் முழுவதும் பல இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு, கிட்டத்தட்ட 24,000 விமானச் சேவைகள் கண்காணிக்கப்பட்டு, ஆட்கடத்தல் நடக்கும் இடங்களில் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக இன்டர்போல் தெரிவித்தது.