இணையக்குற்றங்களைத் தடுக்க காவல்துறையில் புதிய தளபத்தியம்

குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதே புதிய தளபத்தியத்தின் முக்கிய நோக்கம்

இணையக்குற்றங்களைத் தடுக்க காவல்துறையில் புதிய தளபத்தியம்

2 mins read
9e2714b2-4d25-4b4b-a8bd-77ee35918126
உள்துறை துணை அமைச்சர் கோ பெய் மிங் திங்கட்கிழமை (மே 11) மோசடி எதிர்ப்பு மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். - படம்: சாவ் பாவ்

சிங்கப்பூரில் அதிகரித்துவரும் இணைய மோசடிகள், குற்றங்களை ஒடுக்க, ஜூலை மாதம் புதிய காவல்துறை இணையத் தளபத்தியம் (Cyber Command) நிறுவப்படும் என்று உள்துறை துணை அமைச்சர் கோ பெய் மிங் அறிவித்துள்ளார்

சிங்கப்பூர் காவல்துறையில் தற்போது செயல்பட்டுவரும் மோசடி எதிர்ப்புப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு இணையப் பாதுகாப்புப் பிரிவுகளை ஒன்றிணைத்து புதிய தளபத்தியம் உருவாக்கப்படுகிறது.

இந்த இணையத் தளபத்தியம் ஒரு முன்னணிப் பிரிவாகச் செயல்படும். 200 அதிகாரிகளுடன் தொடங்கப்பட்டு, பின்னர் 400க்கும் மேற்பட்ட அதிகாரிகளாக அதிகரிக்கப்படும் என்று திங்கட்கிழமை (மே 11) ‘மோசடி எதிர்ப்பு மாநாடு 2026’ தொடக்க விழாவில் பேசிய திரு கோ கூறினார்.

குற்றம் நடக்கும் முன்னே தடுப்பது இத்தளபத்தியத்தின் முக்கிய நோக்கம்.

மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படும் போலி இணையத்தளங்கள், கைப்பேசி எண்களை முன்கூட்டியே கண்டறிந்து முடக்குவதில் இது கவனம் செலுத்தும்.

தற்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் மூன்றில் இரண்டு பங்கு போலித் தளங்கள் முடக்கப்படுகின்றன. இனிவரும் காலங்களில், குற்றவாளிகள் இணையத்தளங்களை உருவாக்கும் வேகத்தைவிட, விரைவாக அவற்றை அழிக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தப்போவதாக அமைச்சர் கூறினார்.

அனைத்துலக அளவில் 2025ஆம் ஆண்டில் மோசடிகளால் ஏறக்குறைய 442 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மட்டும் கடந்த ஆண்டில் 37,300க்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்கள் பதிவாகி, மக்கள் $913.1 மில்லியனை இழந்துள்ளனர். 2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே இழப்பு $144.3 மில்லியனைத் தாண்டியுள்ளது.

இந்த மோசடிகள் பண இழப்புக்கு அப்பால், மக்களிடையே சமூக நம்பிக்கையைச் சிதைப்பதாக அமைச்சர் கவலை தெரிவித்தார்.

குறிப்பாக, முதியவர்கள் பயத்தின் காரணமாக மின்னிலக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தயங்குவதாகவும், இது அவர்களைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களின் ஓய்வுக்காலச் சேமிப்பையும் குடும்ப நிம்மதியையும் சீர்குலைக்கும் இணையக் குற்றங்களுக்கு எதிராகப் புதிய தளபத்தியம் மிகத் தீவிரமாகப் போராடும்.

20க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ‘மோசடி எதிர்ப்பு மாநாடு 2026’ காவல்துறையின் ‘கெண்டோன்மண்ட்’ வளாகத்தில் மே 13ஆம் தேதி வரை நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்