கூலாய், ஜோகூர்: கார் பதிவெண்ணின் ஒரு பகுதியை மறைத்து, ஜோகூரில் மானிய விலையில் விற்கப்படும் ரோன்95 பெட்ரோலை காரில் நிரப்பியது காணொளியில் பதிவானதையடுத்து, சிங்கப்பூர் நிரந்தரவாசிக்கு புதன்கிழமை (ஜனவரி 14) ஜோகூரின் கூலாய் நீதிமன்றத்தில் 9,000 ரிங்கிட் ($2,850) அபராதம் விதிக்கப்பட்டது.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 108 (3) (e) பிரிவின்கீழ், தனது வாகனத்திற்குச் சொந்தமில்லாத வாகனப் பதிவெண்ணைக் காட்சிப்படுத்தியதாக மலேசியரான 63 வயது லோங் சா கோ மீது குற்றம் சாட்டப்பட்டது.
நீதிமன்றத்தில் குற்றத்தை லாங் ஒப்புக்கொண்டாலும், தாம் பதிவெண்ணை மாற்றவில்லை என்று வாதிட்டார். போக்குவரத்துச் சட்டத்தின் 108வது பிரிவு, தவறான வாகனப் பதிவு அல்லது மோட்டார் வாகனத்திற்கான உரிமம் வழங்குவது உள்ளிட்ட ‘போலியான அறிக்கைகளை’ உள்ளடக்கியது.
குற்றம் நடந்தபோது, லோங்கின் வாகனத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பதிவெண் ‘தவறானது’ என்றும் அவர் பயன்படுத்திய காருக்குச் சொந்தமானது அல்ல என்றும் அரசாங்க வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட அவரது காரின் பதிவெண் SLJ8967M.
குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட லோங், ஆனால் வழக்கின் சாரம் குறித்து விளக்கம் கோரினார். அவர் தமது காரின் பதிவெண்ணை மாற்றினார் என்பதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
அவர் தமது காரின் பதிவெண்ணின் ஒரு பகுதியை மறைத்து, ‘LJ8967’ என்பதை மட்டும் காட்சிப்படுத்தியது, காவல்துறை விசாரணையில் தெரியவந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
இக்குற்றத்துக்கு 5,000 ரிங்கிட் முதல் 20,000 வரை அபராதம் அல்லது ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
லோங் ஓய்வுபெற்றவர், நிலையான வருமானம் இல்லாதவர், அவரது மனைவியும் இல்லத்தரசியாக உள்ளார், அவரது மூன்று பிள்ளைகளில் இருவர் இன்னும் படிக்கிறார்கள். மேலும் இது அவரது முதல் குற்றச்செயல் என்பதால் அவரது தண்டனையைக் குறைக்கவேண்டும் என்று லோங்கின் வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கோரினார்.
இதை ஒரு பாடமாகவும் மலேசியக் குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதை பொது மக்களுக்கு நினைவூட்டும் வகையிலும் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு கூறியது.

