விபத்து ஒன்றில் சிங்கப்பூர் சிறைத்துறை வாகனமும் தனியார் கார் ஒன்றும் சம்பந்தப்பட்டிருப்பது தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விபத்து சீமெய் ஸ்திரீட் 3 பகுதியில் அக்டோபர் 8ஆம் தேதி காலை 9.20 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சிறைத்துறை வாகனம் அப்போது சாங்கி சிறைச்சாலையைச் சேர்ந்த கைதிகளையும் அதிகாரிகளையும் ஏற்றிச் சென்றதாக அறியப்படுகிறது. கைதிகளது மருத்துவப் பரிசோதனைக்காக வாகனம் சாங்கி பொது மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்ததாக சிங்கப்பூர் சிறைத்துறை தெரிவித்தது.
மருத்துவமனைக்குச் சுமார் 400 மீட்டர் தொலைவில் சாலையின் பக்கத்து தடத்தில் இருந்த காரின் இடது பக்கம் மீது சிறை வாகனத்தின் வலது பக்கம் மோதியதாகக் கூறப்படுகிறது.
மோதலால் பொருள் ஒன்று சாலை மீது விழுவதையும் ‘எஸ்ஜி ரோடு விஜிலான்டே’ (SG Road Vigilante) ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் பார்க்க முடிந்தது.
இருப்பினும், சிறை வாகனத்தை ஓட்டியவர் வண்டியை நிறுத்தாமல் தொடர்ந்து மருத்துவமனையை நோக்கிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூர் சிறைத்துறையின் நிலையான இயக்கச் செயல்முறையின்படி, விபத்துக்குப் பிறகு வாகனம் நிறுத்தப்பட்டு சேதம், காயங்கள் குறித்த மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஆனால், இந்தச் சம்பவத்தில் அவ்வாறு செய்யவில்லை.
இதற்கிடையே விபத்தில் சம்பந்தப்பட்ட தனியார் காரை ஓட்டியவரைச் சிறைத்துறை தொடர்புகொண்டதுடன் காவல்துறையிடம் புகாரும் அளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
புகார் செய்யப்பட்டதைக் காவல்துறையினர் உறுதிசெய்துள்ளனர்.