அமெரிக்கா- ஆசியான் தற்காப்புக் கட்டமைப்பை முன்னெடுக்கும் சிங்கப்பூர்

அமெரிக்கா- ஆசியான் தற்காப்புக் கட்டமைப்பை முன்னெடுக்கும் சிங்கப்பூர்

படம்: தற்காப்பு அமைச்சு

02 Nov 2026 - 8:36 pm

2 mins read

மணிலா: பரஸ்பர நன்மை பயக்கும் அமெரிக்கா-ஆசியான் தற்காப்பு ஒத்துழைப்புக் கட்டமைப்பை உருவாக்க, அமெரிக்காவுடனும் பிற தென்கிழக்காசிய நாடுகளுடனும் சிங்கப்பூர் இணைந்து செயல்படவிருக்கிறது.

ஆனால், பிற முக்கியப் பங்காளிகளுடன் ஏற்கெனவே உள்ள தற்காப்பு ஏற்பாடுகளுடன் இணைந்தே அது முன்னெடுக்கப்படும் என்று சிங்கப்பூர் வலியுறுத்தியது.

கடந்த மாதம் நடைபெற்ற ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் முன்மொழிந்த அந்தத் திட்டம் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தபோது சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சு அந்தக் கருத்துகளைத் தெரிவித்தது.

2027ஆம் ஆண்டில் ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பு வகிக்கவுள்ள சிங்கப்பூர், அமெரிக்காவின் திட்டத்தை ஒருங்கிணைப்பதற்கு எதிர்பார்ப்பதாகக் கூறியது.

“பொதுவான சவால்களுக்கும் கவலைகளுக்கும் தீர்வுகாண்பதில் அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயல்பட பரஸ்பர நன்மை பயக்கும் கட்டமைப்பை உருவாக்க சிங்கப்பூர் அமெரிக்காவுடனும் பிற ஆசியான் உறுப்பு நாடுகளுடனும் இணைந்து செயல்படும்,” என்று தற்காப்பு அமைச்சு சுட்டியது.

முன்மொழியப்பட்ட அந்தக் கட்டமைப்பு, வெளிப்புறப் பங்காளிகளுடன் ஆசியான் மேற்கொள்ளும் பல திட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் அது அனைவரையும் உள்ளடக்கிய வட்டாரப் பாதுகாப்புக் கட்டமைப்பிற்கான ஆசியானின் நீண்டகால அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது என்றும் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.

“பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் பொதுவான பாதுகாப்பு சவால்களுக்குத் தீர்வு காணவும் ஆசியான் உறுப்பு நாடுகள், எங்களது பிளஸ் பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதைச் சிங்கப்பூர் ஆவலுடன் எதிர்பார்க்கிறது,” என்றும் அது சொன்னது.

நடைமுறையில் உள்ள அமைச்சர்கள் கூட்டங்கள், சீனா, இந்தியா, ரஷ்யா, அமெரிக்காவுடனான கடல்சார் பயிற்சிகள், சீனா, தென் கொரியா, நியூசிலாந்து ஆகியவை பங்கெடுக்கும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள என ஏற்கெனவே உள்ள ஒத்துழைப்புகளைத் தற்காப்பு அமைச்சு சுட்டிக்காட்டியது.

அவை “ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்துக்கு உறுதுணையாக அமைவதோடு, ஆசியான் தலைமையிலான வட்டாரப் பாதுகாப்புக் கட்டமைப்பின் வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன,” என்றும் அது குறிப்பிட்டது.

அந்தப் பாதுகாப்பு கட்டமைப்பு குறித்த விரிவான விவரங்களை அமெரிக்கா இன்னும் வெளியிடவில்லை.

எனினும், ஆசியான்- அமெரிக்கா இடையிலான உறவின் 50வது ஆண்டைக் குறிக்கும் 2027ஆம் ஆண்டில் அந்தத் திட்டம் முழு வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
ஆசியான்தற்காப்புஅமைச்சுசான் சுன் சிங்அமெரிக்கா