அமெரிக்கப் படைகளுக்கு சிங்கப்பூரில் ஆதரவு வழங்கப்படுவதுண்டு: தற்காப்பு அமைச்சு

அமெரிக்கப் படைகளுக்கு சிங்கப்பூரில் ஆதரவு வழங்கப்படுவதுண்டு: தற்காப்பு அமைச்சு

2 mins read
0b4c6633-3d50-449c-9325-a16790314215
செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) சிங்கப்பூர் நீரிணையில் காணப்பட்ட அமெரிக்காவின் யுஎஸ்எஸ் டிரிப்போலி போர்க் கப்பல். - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூர், தளவாட ரீதியான ஆதரவையும் இவ்வழியே பயணம் மேற்கொள்ளும்போது தேவையான உதவியையும் அடிக்கடி அமெரிக்கப் படைகளுக்கு வழங்கி வருவதாகத் தற்காப்பு அமைச்சு வியாழக்கிழமை (மார்ச் 19) தெரிவித்தது.

1990ஆம் ஆண்டு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி உள்ளூரில் அமைந்துள்ள வசதிகளைப் பயன்படுத்த சிங்கப்பூர், அமெரிக்கப் படைகளுக்கு வகைசெய்வதாக அமைச்சு சொன்னது. சிங்கப்பூரில் உள்ள சம்பந்தப்பட்ட வசதிகளை அமெரிக்கா பயன்படுத்த 1990ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தம் வகைசெய்கிறது.

பயணங்களுக்கு நடுவே இங்கு அமைந்துள்ள சம்பந்தப்பட்ட நிலையங்களில் நிறுத்திக்கொள்ளவோ அவற்றின் வழியே செல்லவோ வெளிநாட்டு ராணுவ விமானங்களுக்கும் கப்பல்களுக்கும் சிங்கப்பூர் அடிக்கடி ஆதரவளித்து வருகிறது என்றும் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தொடரும் நிலையில் கடந்த சில நாள்களாக சிங்கப்பூர் நீரிணையில் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் காணப்பட்டதையடுத்து ஊடகங்களின் கேள்விகளுக்குத் தற்காப்பு அமைச்சு பதிலளித்தது.

யுஎஸ்எஸ் டிரிப்போலி (USS Tripoli) போர்க் கப்பல் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) சிங்கப்பூர் நீரிணைக்கு வந்தது. அதில் ஆயிரக்கணக்கான கடற்படையினரும் கப்பல்துறை ஊழியர்களும் இருப்பதாக சிஎன்என் ஊடகம் தெரிவித்திருந்தது.

அந்த போர்க் கப்பல் மத்திய கிழக்கு வட்டாரத்துக்கு அனுப்பப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள், சிஎன்என்னிடம் தெரிவித்தனர். ஆனால், அது எங்கு சென்றுகொண்டிருக்கிறது என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை.

ஜப்பானின் ஒக்கினாவா பகுதியில் செயல்படும் அமெரிக்கப் படை அக்கப்பலில் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. அப்படை, 2,200 பேரைக் கொண்ட, துரிதமாகச் செயல்படும் படை என்றும் அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

யுஎஸ்எஸ் டிரிப்போலி சிங்கப்பூரை நெருங்கியபோது அது கப்பல்களைக் கண்காணிக்கும் இணையத்தளங்களில் தென்பட்டது.

பாதுகாப்புக்காக போர்க் கப்பல்கள் பொதுவாக தங்கள் சமிக்ஞை முறைகளை அணைத்து வைக்கும். அதேவேளை, கப்பல்களுக்கிடையே விபத்துகள் நிகழாமல் இருக்க போக்குவரத்து அதிகம் உள்ள நீர்ப்பகுதிகளில் சமிக்ஞை முறைகள் மீண்டும் செயல்படுத்துவதுண்டு.

செவ்வாய்க்கிழமை மற்றொரு அமெரிக்க போர்க் கப்பலான யுஎஸ்எஸ் நியூ ஓர்லின்சும் சிங்கப்பூரைத் தாண்டிச் சென்றதை ஸ்ட்ரெய்ட்ஸ் தெரிந்துகொண்டது. பிறகு அக்கப்பல் மத்திய கிழக்கை அடைவதற்கு முன்பு மலேசியாவின் சிலாங்கூர் மாநிலப் பகுதியையும் தாண்டிச் சென்றது.

குறிப்புச் சொற்கள்