சிங்கப்பூரின் பொது வீடமைப்பு மிகவும் கட்டுப்படியான விலையில், எளிதில் கிடைக்கும் வகையில் இருப்பதாக அனைத்துலக அளவில் வரையப்பட்ட இரு அறிக்கைகள் அங்கீகரித்துள்ளன.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) புதன்கிழமையன்று (அக்டோபர் 2) இத்தகவலை வெளியிட்டது.
இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் பொது வீடமைப்பின்கீழ் உள்ள மறுவிற்பனை வீடுகளின் விலை 2.5 விழுக்காடு கூடியது. சராசரியாக மறுவிற்பனை அடுக்குமாடி வீடுகளின் விலை 2.9 விழுக்காடு கூடி 629,856 வெள்ளிக்கு அதிகரித்தது.
இந்நிலையில் சிங்கப்பூரின் பொது வீடமைப்பு பற்றிய அறிக்கை முடிவுகள் வெளிவந்துள்ளன.
எவ்வளவு எளிதில் வீடு வாங்கலாம் என்பதைப் பட்டியலிடும் டெமோகிராஃபியா இன்டர்னேஷனல் ஹவுசிங் அஃபோர்டபிலிட்டி 2024 (Demographia International Housing Affordability 2024) எனும் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 94 முக்கிய வீடமைப்புச் சந்தைகளில் சிங்கப்பூர் 11வது இடத்தைப் பிடித்தது. அப்பட்டியலில் சிங்கப்பூர் கடந்த ஆண்டு 47வது இடத்தில் வந்தது.
சிங்கப்பூரில் பொது வீடமைப்பு தொடர்ந்து கட்டுப்படியான விலையில் கிடைப்பதாக அந்த அறிக்கையில் தெரிகிறது. மேலும், இங்கு 90 விழுக்காட்டினர் சொந்த வீடு வைத்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் ஆராயப்பட்ட வீடமைப்புச் சந்தைகளுக்கானவற்றுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரில்தான் அந்த விகிதம் ஆக அதிகமாக இருக்கிறது.
சிங்கப்பூரைத் தவிர ஆஸ்திரேலியா, சீனா, நியூசிலாந்து பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நடுத்தர வருமானம் பெறுவோர் எவ்வளவு எளிதில் வீடு வாங்க முடியும் என்பதை டெமோகிராஃபியா அறிக்கை ஆராய்ந்தது.
அதேபோல், நகர நிலக் கழகம் (Urban Land Institute) வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள 48 நகரங்களில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள 11 நாடுகளைச் சேர்ந்த 48 நகரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டுக்கான ‘ஏஷியா-பசிபிக் ஹோம் அட்டெய்னபிலிட்டி இன்டெக்ஸ்’ (Asia-Pacific Home Attainability Index) எனும் அந்த அறிக்கையில் ஆஸ்திரேலியா, இந்தோனீசியா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆராயப்பட்டன. வீவக வீடுகளின் நடுநிலை (median) விலை, ஒரு குடும்பத்தின் நடுநிலை வருமானத்தில் 4.7 மடங்கு என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பெரும்பாலான மறுவிற்பனை வீவக வீடுகள் கட்டுப்படியான விலையில் கிடைப்பதாகவும் ஒட்டுமொத்த மறுவிற்பனை வீட்டுப் பரிவர்த்தனைகளில் குறைவானவையே மிகவும் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் வீவக புதன்கிழமையன்று தெரிவித்தது.