2026ல் வளர்ச்சி 1%-3%க்குள் இருக்குமென எதிர்பார்ப்பு

2025 பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு: 4%க்கு உயர்த்தியது சிங்கப்பூர்

2 mins read
a2c0eec6-3f64-4f57-aa56-4cc2193fbc22
மூன்றாம் காலாண்டில், பொருளியல் ஆண்டு அடிப்படையில் 4.2 விழுக்காடு விரிவடைந்திருந்தது. அது வர்த்தக, தொழில் அமைச்சு எதிர்பார்த்தைக் காட்டிலும் அதிகம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூர், 2025ஆம் ஆண்டுக்கான அதன் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை உயர்த்தியுள்ளது.

மூன்றாம் காலாண்டின் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிகம் இருந்ததால் முன்னுரைப்பு மாற்றப்பட்டது. உற்பத்தி, மொத்த வர்த்தகம், நிதி, காப்புறுதித் துறைகளில் காணப்பட்ட முன்னேற்றம் அதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு, கிட்டத்தட்ட 4 விழுக்காட்டுக்கு இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஆகஸ்ட் மாதம், அது 1.5 விழுக்காட்டுக்கும் 2.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. வர்த்தக, தொழில் அமைச்சு வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) அந்தத் தகவலை வெளியிட்டது.

அடுத்த ஆண்டுக்கான (2026) பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பையும் அமைச்சு முதன்முறையாக அறிவித்தது. அது ஒரு விழுக்காட்டுக்கும் 3 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாம் காலாண்டில், பொருளியல் ஆண்டு அடிப்படையில் 4.2 விழுக்காடு விரிவடைந்திருந்தது. அமைச்சின் முன்னுரைப்பான 2.9 விழுக்காட்டைக் காட்டிலும் அது அதிகம். இரண்டாம் காலாண்டில் பொருளியல் 4.7 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது. அந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இவ்வாண்டு முழுமைக்குமான முன்னுரைப்பு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

காலாண்டு அடிப்படையில் பார்க்கும்போது, பொருளியல் மூன்றாம் காலாண்டில் 2.4 விழுக்காடு கூடியது. அதற்கு முந்திய காலாண்டில், வளர்ச்சி 1.7 விழுக்காடாகப் பதிவானது.

இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளுக்கான பொருளியல் வளர்ச்சி, ஆண்டு அடிப்படையில் சராசரியாக 4.3 விழுக்காடாக உள்ளது என்று அமைச்சு தெரிவித்தது. சென்ற ஆண்டு (2024) முழுமைக்குமான வளர்ச்சி விகிதமான 4.4 விழுக்காட்டைவிட அது சற்றுக் குறைவு.

செப்டம்பரில், தொழிற்சாலைகளின் உற்பத்தி ஆண்டு அடிப்படையில் 16.1 விழுக்காடு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்தே பொருளியல் வளர்ச்சி கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆகஸ்ட் மாதம் அது 9 விழுக்காடு குறைந்திருந்தது. பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் தரவுகளில் அந்த விவரங்கள் தெரியவந்தன.

புளூம்பெர்க் கருத்துக்கணிப்பில் செப்டம்பர் மாதத்தில் தொழிற்சாலைகளின் உற்பத்தி 7.5 விழுக்காடு உயரும் என்று பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்திருந்தனர்.

இதற்கிடையே எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி ஆண்டு அடிப்படையில், அக்டோபரில் 22.2 விழுக்காடு கூடியது. செப்டம்பரில் அது 7 விழுக்காடாக இருந்தது. நவம்பர் 17ஆம் தேதி என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வெளியிட்ட தரவுகளில் அந்தப் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.

எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சூடுபிடித்து வருகிறது. ஏற்றுமதி தொடர்ந்து கூடுவதற்கு அதுவும் ஒரு காரணம். அதனால் நான்காம் காலாண்டில் பொருளியல் வளர்ச்சி தொடர்ந்து வலுவாக வேகம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளியல் நிபுணர்கள் பலரும் இவ்வாண்டுக்கான வளர்ச்சி முன்னுரைப்பை உயர்த்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்