அனைத்துலக அளவில் சமூக ஊடகப் பயன்பாட்டை அதிகம் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதாக அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
‘மெல்ட் வாட்டர்’ எனும் சமூக ஊடகக் கண்காணிப்பு நிறுவனம், உள்ளூர்ப் படைப்பு நிறுவனத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில் சிங்கப்பூரில் சமூக ஊடகப் பயன்பாடு 88.2 விழுக்காட்டில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, சிங்கப்பூரிலுள்ள 16 வயதுக்கும் மேற்பட்டோர் அன்றாடம் இரண்டு மணி நேரம் இரண்டு நிமிடங்கள் சமூக ஊடகத்தில் செலவிடுகிறார்கள் என்பதை ஆய்வு சுட்டியது.
சிங்கப்பூர்வாசிகள் ஒருநாளில் ஆறு மணி நேரம் 33 நிமிடங்களை இணையத்தில் செலவிடுகின்றனர். உலக அளவில் இந்தப் பயன்பாடு ஆறு மணி நேரம் 38 நிமிடங்களாக உள்ளது.
பிரபல சமூக ஊடகத் தளமான டிக் டாக், சிங்கப்பூரில் அதிகம் பயன்படுத்தப்படுவதையும், ஆண்ட்ராய்டு திறன்பேசி பயன்படுத்துவோர் மட்டும் வாரத்துக்கு 34 மணி நேரம் 29 நிமிடம் டிக் டாக் தளத்தில் செலவிடுவதையும் ஆய்வு கோடிட்டுக் காட்டியுள்ளது.
ஏழுக்கும் அதிகமான தளங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் ‘ரெடிட்’, ‘டெலிகிராம்’ ஆகிய தளங்கள் பிற நாடுகளைவிட சிங்கப்பூரில் அதிகம் பயன்பாட்டில் உள்ளன.
மாதம் சராசரியாக 116.9 முறை இத்தளம் நாடப்படுவதையும் மூன்று மணி நேரம் 56 நிமிடங்கள் அதில் செலவிடப்படுவதையும் ஆய்வு சுட்டியது. ரஷ்யா, ஃபின்லாந்து நாடுகளைத் தொடர்ந்து அனைத்துலக அளவில் ‘டெலிகிராம்’ செயலியை அதிகம் பயன்படுத்தும் நாடு சிங்கப்பூர் என்றது ஆய்வு. மாதம் 237 முறை டெலிகிராம் செயலி பயன்படுத்தப்பட்டுள்ளதை ஆய்வு தெரிவித்தது.
அதிக சமூக ஊடகப் பயன்பாடு உள்ள அதே வேளையில் 71.4 விழுக்காட்டினர் இணையத்தில் எது உண்மை, எது பொய்ச்செய்தி என்பதில் அக்கறை கொண்டுள்ளனர் என்றது ஆய்வு.
சிங்கப்பூரில் உள்ள இணையப் பயனர்களில் 36 விழுக்காட்டினர், தாங்கள் பயன்படுத்தும் தளங்கள் தங்களின் தனிப்பட்ட தரவை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதைக் குறித்து கவலை கொள்வதையும், 39 விழுக்காட்டினர் தரவுகளை எடுக்க வாய்ப்புள்ள ‘குக்கீஸ்’ அம்சத்தை நிராகரிப்பதையும் ஆய்வு கோடிட்டுக் காட்டியுள்ளது.

