சூயஸ் கால்வாய் வழியாகக் கப்பல்கள் மீண்டும் பயணம் செய்யக்கூடும்.
செங்கடலில் ஏமன் கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்ட வன்முறைச் சம்பவங்களைத் தவிர்க்க கிட்டத்தட்ட ஈராண்டுகளாகக் கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றி மாற்றிவிடப்பட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து கப்பல்கள் இப்போது மீண்டும் சூயஸ் கால்வாய் வழியாகச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் தயாராய் இருக்கிறது.
சூயஸ் கால்வாய் வழியாகக் சரக்குக் கப்பல்கள் போகும்போது பொருள்களைச் சேர்க்கவேண்டிய இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கான பயண நேரம் குறையும்.
அதோடு, நீண்டகாலத்தில் சில்லறை வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் இருதரப்பினருக்கும் செலவு குறையலாம்.
எனினும், இப்போதைக்குக் கப்பல் சேவை, பயண நேரங்கள் மாறும்போது சிங்கப்பூர் போன்ற கப்பல்கள் மாறும் முனையங்களில் போக்குவரத்து அதிகமாக இருக்கலாம் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட மெயர்ஸ்க் (Maersk) கப்பல் இம்மாதம் 18லிருந்து 19ஆம் தேதி வரை பாப் எல்-மாண்டெப் நீரிணை, செங்கடல் ஆகியவற்றை முடிந்தவரை ஆக உயரிய பாதுகாப்பு நடவடிக்கைகளால் வெற்றிகரமாகக் கடந்தது. அறிக்கை மூலம் மெயர்ஸ்க் இதனைத் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இது, சூயஸ் கால்வாய், செங்கடல் ஆகியவற்றின் வழியாகச் சென்று கிழக்கு-மேற்கு வாசலை மறுபடியும் படிப்படியாகப் பயன்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளின் முதற்கட்டமாகும்.
அதேவேளை, தற்போதைக்கு அத்தகைய பயணங்களுக்குத் திட்டமிடப்படவில்லை.
இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்க கிழக்குக் கடற்கரைகளுக்கு இடையே தங்களின் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியே செல்லத் தொடங்கும் என்று பிரான்சின் ‘சிஎம்ஏ சிஜிஎம்’ (CMA CGM) முன்னதாக இம்மாதம் தெரிவித்திருந்தது.
அதன்படி முதல் கப்பல் வரும் ஜனவரி மாதம் பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து புறப்படும்.
கப்பல்கள் மறுபடியும் செங்கடல், சுவெஸ் கால்வாய் ஆகியவற்றின் வழியே அனுப்பப்படுவது உட்பட இவ்விவகாரங்களை சிங்கப்பூர் துறைமுக ஆணையம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அதன் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
துவாஸ் துறைமுகத்தில் கொள்ளளவைத் தாங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.
இவ்வாண்டிறுதிக்குள் துவாஸ் துறைமுகத்தில் 12 கப்பல் நிறுத்துமிடங்கள் செயல்பாட்டில் இருக்கும்.
ஏமனின் ஹூத்தி படை சென்ற ஆண்டு பாலஸ்தீனத்துடன் ஒன்றுபட்டு நிற்பதாக அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது கடல்துறை ஊழியர்கள் கொல்லப்பட்டனர். நான்கு கப்பல்கள் மூழ்கின.

