சீனாவிலிருந்து வரும் கோல்ட் பிளம் வினிகர் விற்பனையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்படாத பொருளான கந்தகம் டை ஆக்சைடு கண்டறியப்பட்டது.
2027 ஜூன் 30ஆம் தேதி காலாவதியாகக்கூடிய 550 மில்லி லிட்டர் கோல்ட் பிளம் வினிகர் பாட்டில்களுக்கு விற்பனையிலிருந்து அகற்றப்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு புதன்கிழமை (செப்டம்பர் 18) தெரிவித்தது.
அதிகப்படியான கந்தகம் டை ஆக்சைடு சல்பைட் சிலருக்கு ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அது கூறியது. அரிப்பு, தடிப்பு, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
சிங்கப்பூரின் உணவு விதிமுறைகளின் கீழ், ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருள்கள் உணவில் சேர்க்கப்பட்டிருந்தால் அவை, அதில் தெரிவிக்கப்பட வேண்டும்.
ஒவ்வாமை உள்ளவர்களைத் தவிர, சல்பைடு பெரிய அளவில் உணவுப் பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்தாது என்று சிங்கப்பூர் உணவு அமைப்புகுறிப்பட்டது.
பாதிப்புள்ள அனைத்து பொருள்களையும் திரும்பப்பெறுமாறு வினிகரை இறக்குமதி செய்யும் கோய் சியாப் ஹின் நிறுவனத்திடம் அமைப்பு கூறியுள்ளது.
எடை குறைப்புக்காக உட்கொள்ளப்படும் காபி, தேநீர்
எடை குறைப்புக்காக உட்கொள்ளப்படும் ஜப்பானின் ‘சாசான்டோ ஸ்லிமிங் காபி’, ‘சாஸான்டோ ஸ்லிமிங் டீ’ மலேசியாவிலிருந்து வரும் ‘யுனிக் குட் மார்னிங் கேன்டீஸ்’, ‘யுனிக் குட் நைட் கேன்டீஸ்’, ஆகிய நான்கு பொருள்களை உட்கொள்ள வேண்டாம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) எச்சரித்துள்ளது.
அவற்றில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவை உள்ளூர் மின்-வர்த்தக தளங்களில் விற்கப்படுகின்றன. கொழுப்பை எரிக்கும், எடையைக் குறைக்கும், பசியைக் கட்டுப்படுத்தும், நச்சுத்தன்மையை நீக்கும், செரிமானத்திற்கு உதவுகின்றன, வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்துகின்றன என்று கூறப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இவற்றை விற்பனைப் பட்டியலிலிருந்து அகற்ற மின் வர்த்தக தளங்களுடன் பணியாற்றியுள்ளதாகவும், விற்பனை நிறுத்துமாறு விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் அமைப்பு கூறியது.
தெரியாத அல்லது உறுதிப்படுத்தப்படாத மூலங்களிலிருந்து வாங்கும் பொருள்களை உட்கொள்வதிலுள்ள அபாயங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு சிங்கப்பூர் உணவு அமைப்பு பயனீட்டாளர்களைக் கேட்டுக்கொண்டது. பொருள்களை வாங்குவதற்கு முன்னர் கூடுதல் தகவல்களை நாடுமாறு அறிவுறுத்தியது.
சிங்கப்பூரில் பாதுகாப்பற்ற உணவை விற்பது குற்றமாகும்.
குற்றம் செய்தவர்களுக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் புரிவோருக்கு $10,000 வரை அபராதம், மூன்று மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பாதுகாப்பற்ற உணவுப் பொருள்களின் விற்பனை, விநியோகம் குறித்த அறிந்தால் www\.sfa\.gov\.sg\/feedback என்ற முகவரியில் சிங்கப்பூர் உணவு அமைப்புக்கு எழுதலாம்.

