சிங்கப்பூரில் மருத்துவராக விரும்புவோர் இனி இந்தியாவில் உள்ள உயர்கல்விக்கான மணிப்பால் கழகத்திலும் கல்வியை மேற்கொள்ளலாம்.
மருத்துவக் கல்விக்காக சிங்கப்பூர் புதிதாக அங்கீகரித்துள்ள எட்டுப் பல்கலைக்கழகங்களில் அதுவும் ஒன்று.
பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து பின்வரும் எட்டுக் கல்விக்கழகங்களில் சிங்கப்பூர் மாணவர்கள் மருத்துவக் கல்வியை மேற்கொள்ளலாம்.
1. அடிலெய்ட் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா
2. மணிப்பால் உயர்கல்விக் கழகம், இந்தியா
3. கால்வே பல்கலைக்கழகம், அயர்லாந்து
4. செயின்ஸ் மலேசியப் பல்கலைக்கழகம், மலேசியா
5. ஆகா கான் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, பாகிஸ்தான்
தொடர்புடைய செய்திகள்
6. சிங்குவா பல்கலைக்கழகம், சீனா
7. எக்ஸெட்டர் பல்கலைக்கழகம், பிரிட்டன்
8. சிட்டி செயிண்ட் ஜார்ஜஸ், லண்டன் பல்கலைக்கழகம், பிரிட்டன்
சிங்கப்பூரின் மூப்படையும் சமூகத்துக்கு இடையில் அதிகரித்துவரும் மருத்துவர்களுக்கான தேவையைப் பூர்த்திசெய்ய, புதிதாக அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் கைகொடுக்கும் என்று நம்புவதாகச் சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் மருத்துவச் சங்கமும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) அறிக்கை ஒன்றை வெளியிட்டன.
சிங்கப்பூரில் தற்போது 112 வெளிநாட்டு மருத்துவக் கல்விக் கழகங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. புதிய பல்கலைக்கழகங்களுடன் சேர்த்து அந்த எண்ணிக்கை தற்போது 120க்கு உயர்ந்துள்ளது.
இவ்வாண்டிலிருந்து மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் புதிதாக அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் சேர விண்ணப்பிக்கலாம்.
சிங்கப்பூரில் வேலை செய்யும்படி விண்ணப்பம் செய்யும் வெளிநாட்டு மருத்துவர்கள் சிங்கப்பூர்க் கல்விக் கழகங்களில் வழங்கப்படும் பயிற்சிகளுக்கு நிகரான பயிற்சிகளைப் பெற்றிருப்பதைச் சங்கம் உறுதிசெய்கிறது.
புதிய பல்கலைக்கழகத்தைப் பட்டியலில் சேர்க்குமுன் சங்கம் பல அம்சங்களை ஆராய்வதாகக் குறிப்பிட்டது.
பள்ளியின் அனைத்துலகத் தரவரிசை, கல்விக் கழகங்களில் ஆங்கில மொழி மூலம் பாடங்கள் கற்பிக்கப்படுவது, பல்கலைக்கழகங்களில் மருத்துவர்களின் செயல்பாடு ஆகியவை கருத்தில்கொள்ளப்படுவதாகச் சங்கம் சொன்னது.
புதிதாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பள்ளிகளில் வெற்றிகரமாகக் கல்வியை முடிக்கும் மாணவர்கள் சிங்கப்பூரில் பணியாற்ற விண்ணப்பம் செய்யலாம். அவர்கள் சிங்கப்பூரர்களாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

