மேசைப்பந்தாட்ட அறையை வேலையிடமாக மாற்றும் சிங்கப்பூர் பொழுதுபோக்கு மன்றத்தின் தீர்மானத்தை எதிர்த்து மன்ற உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்
142 ஆண்டுகள் பழைமையான இம்மன்றத்தின் ‘பில்லியர்ட்ஸ் குழு’ உறுப்பினர்களான திரு சியன் கெர்வின் மேத்யூஸ் மற்றும் திரு மு யீ ஷியோங் ஆகியோர் இவ்விவகாரம் தொடர்பில் நவம்பர் 19 அன்று உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
பொழுதுபோக்கு மன்ற சாசனத்தின்படி மேசைப்பந்தாட்ட அறையை இணைவேலையிடமாக மாற்றுவதன் தொடர்பில் போடப்பட்ட தீர்மானம், அது நிறைவேற வகைசெய்யும் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறவில்லை என்றும், எனவே அது செல்லாததாகக் கருதப்பட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பு கூறியுள்ளது.
மன்றத்தின் உறுப்பினர்கள் அக்டோபர் 18 அன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு சந்திப்பின்போது மூன்று தீர்மானங்கள்மீது வாக்களித்தனர்.
அதன்படி முதலாவது தீர்மானம், இணைவேலையிடம் அமைய இடமளிப்பதற்காக, மன்றத்தின் மேசைப்பந்தாட்ட அறையை இரண்டாவது மாடியிலிருந்து அடித்தளத்தில் உள்ள இடத்திற்கு மாற்றுவது பற்றியது. இதற்கு நில மேம்பாட்டுக் கட்டணமாக $4.9 மில்லியன் செலவாகும்.
உறுப்பினர்களை, மன்றத்தின் நிர்வாகக் குழு இதற்கு எதிராக வாக்களிக்குமாறு வலியுறுத்தியதால், இந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், உறுப்பினர்கள் மேலும் இரண்டு தீர்மானங்கள்மீது வாக்களித்தனர். ஆரம்பத்தில் திட்டமிட்டபடி, முழு மேசைப்பந்தாட்ட அறையையும் மாற்றுவது மற்றும் பாதிக்கும் மேற்பட்ட இடத்தை மாற்றுவது ஆகியவை அந்தத் தீர்மானத்தில் இடம்பெற்றிருந்தன.
இந்த வாக்கெடுப்பில் செலுத்தப்பட்ட மொத்தம் 514 வாக்குகளில், முழுமையான மாற்றத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 125 வாக்குகளும் பதிவாகின. 183 செல்லாத வாக்குகளும் 55 வெற்று வாக்குகளும் இருந்தன.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே இரண்டு தீர்மானங்களையும் நிராகரிக்க உறுப்பினர்களுக்கு ஒரு தெளிவான சூழல் இல்லையென்று குறிப்பிட்ட மனுதாரர்கள், 55 வெற்று வாக்குகள் தீர்மானத்திற்கு எதிரான வாக்குகளாகக் கருதப்பட வேண்டும் என்று முறையிட்டுள்ளனர்.

