தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலஸ்தீனர்களுக்குக் கூடாரங்கள் அனுப்பிய சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம்

2 mins read
2de00cf5-ed6c-40f3-ae03-e1f212480789
காஸாவிற்குக் கராம் அபு சலிம் பகுதி வழியாகச் சென்றுசேர்ந்த கூடாரங்கள் கிட்டத்தட்ட 6,500 பேருக்கு உதவியாக இருக்கும். - படம்: சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம்

சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் காஸாவில் அவதியுறுவோருக்காகக் கூடாரங்களை அனுப்பியுள்ளது. அந்தக் கூடாரங்கள் கிட்டத்தட்ட 6,500 பேருக்கு உதவியாக இருக்கும்.

காஸாவில் மனிதநேய நெருக்கடி தொடங்கி செவ்வாய்க்கிழமையுடன் (அக்டோபர் 7) ஈராண்டுகள் ஆகின்றன. அதை அனுசரிக்கும் வகையில் கூடாரங்கள் கராம் அபு சலிம் பகுதி வழியாக அங்குச் சென்றுசேர்ந்ததாகச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது.

செஞ்சிலுவைச் சங்க அனைத்துலகக் குழு போன்று செஞ்சிலுவை செம்பிறை இயக்கத்தில் உள்ள மற்றப் பங்காளித்துவ அமைப்புகளின் மூலம் நிவாரணப் பணிகளுக்குக் கூடுதலாக $500,000 வழங்கியதாக அது கூறியது.

சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் காஸாவில் மனிதநேய உதவிக்காகக் கொடுத்த தொகை $1.9 மில்லியனை எட்டியுள்ளது.

மருந்துப் பொருள்கள், சுகாதாரப் பொருள்கள், உணவுப் பொருள்கள், நீர் வடிகட்டிக் கட்டமைப்புகள் முதலியவற்றை வாங்குவதற்குச் சங்கம் வழங்கிய நிதி பயன்படுத்தப்படுகிறது. காஸா வட்டாரத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின் திறந்தவெளி மருத்துவமனை செயல்படுவதற்கும் அது கைகொடுக்கிறது.

மேலும் எகிப்தில் பாலஸ்தீனப் பிள்ளைகளுக்காக நடமாடும் கல்வி வாகனத்துக்கும் உதவிக்கரம் நீட்டியுள்ளது செஞ்சிலுவைச் சங்கம். அதற்காக ஒரு வேன் வகுப்பறையாக உருமாற்றப்பட்டுள்ளது.

அங்கு வசிக்கும் பாலஸ்தீனக் குடும்பங்களுக்கு மருத்துவ, மனநல, சமூகச் சுகாதாரச் சேவைகளை வழங்குவதாகவும் சங்கம் சொன்னது.

காஸாவில் வெகுசில மருத்துவ வசதிகளே தற்போது உள்ளன. போரால் உயிருக்குப் போராடுவோருக்கு மருத்துவ உதவி வழங்குவதில் கவனம் செலுத்துவதாகப் பாலஸ்தீனச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது. குறைவான மருந்துப் பொருள்கள், மருத்துவச் சாதனங்களுடன் மிகவும் கடுமையான சூழலில் மருத்துவத் துறையினர், போரில் காயமடைந்தோருக்குச் சிகிச்சை அளிக்கின்றனர்.

காஸாவில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு அங்கிருப்பதைத் தவிர வேறு வழியில்லை; நகரின் தென்புறம் செல்ல அவர்களிடம் பணமில்லை; காயமுற்றவர்கள், நோயுற்றவர்கள், முதியவர்களை அழைத்துச்செல்லவும் பாலஸ்தீனர்களுக்கு வசதியில்லை என்று சங்கம் கூறியது.

“சிதைந்த வீடுகளின் இடிபாடுகளுக்கு இடையில் அல்லது தெருக்களில் குடும்பங்கள் வசிக்கின்றன. கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழ அத்தியாவசியப் பொருள்களுக்காக அங்கிருப்போர் அவதியுறுகின்றனர்,” என்றது சங்கம்.

நிவாரணப் பொருள்கள் காஸாவில் நுழைய விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளுக்கும் தற்போதைய பகைமை உணர்வுக்கும் இடையில் மக்களுக்குத் தொடர்ந்து கூடுதல் உதவிகள் தேவைப்படுவதாக அது குறிப்பிட்டது.

காஸாவில் சிரமப்படும் பொதுமக்களுக்காகச் சிங்கப்பூர் பத்தாம் முறையாக மனிதநேய உதவியைச் செய்துள்ளது. அதையும் சேர்த்து, சிங்கப்பூரிலிருந்து காஸாவுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்தத் தொகை $23 மில்லியனுக்கும் அதிகம்.

குறிப்புச் சொற்கள்