சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் மியன்மாரிலும் தாய்லந்திலும் இடம்பெறும் நெருக்கடிக்கால நிவாரண முயற்சிகளுக்கு $150,000 நிதியாதரவு வழங்க உறுதிகூறியுள்ளது.
நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மியன்மார் ராணுவத் தலைவர் மிங் அன் லைன் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் குறைந்தது ஒன்பது பேர் பலியானதை அதிகாரிகள் உறுதிசெய்தனர். அவர்களில் எட்டு பேர் இடிந்துவிழுந்த கட்டடத்தில் சிக்கி மாண்டனர். அங்கிருந்த நூற்றுக்கணக்கானோரை இன்னமும் காணவில்லை.
தொடக்கக் கட்டமாக $150,000 நிதியாதரவை வழங்கவிருக்கும் சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம், விரைவில் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டவிருக்கிறது
உணவு, தண்ணீர், போர்வைகள், சுகாதாரப் பொருள்கள் ஆகிய உடனடி அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்ய சங்கத்தின் நிதி பயன்படுத்தப்படும்.
காயமடைந்தோர், வீடுகளை இழந்தோர், அவசர உதவித் தேவைப்படுவோர் என பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளோர் குறித்து சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் அதிக அக்கறை செலுத்திவருவதாகச் சங்கத்தின் தலைமைச் செயலாளரும் நிர்வாகத் தலைவருமான திரு பெஞ்சமின் வில்லியம் கூறினார்.
உள்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்திருப்பது அவசர மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு இடையூறாக உள்ளதாய் சொன்ன அவர், மியன்மாரிலும் தாய்லாந்திலும் ஏற்பட்ட பெருஞ்சேதத்தால் துரிதமான ஒருங்கிணைக்கப்பட்ட உதவி தேவைப்படுகிறது என்றார்.
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் கூடுதல் உதவிகள் செய்ய மியன்மாரிலும் தாய்லாந்திலும் உள்ள செஞ்சிலுவைச் சங்கங்களுடன் அணுக்கமாக செயல்படுகிறது.

