அனைத்துலகக் கடல்வழிப் பாதைகளில் செல்வது உரிமையே தவிர சலுகையல்ல

அனைத்துலகக் கடல்வழிப் பாதைகளில் செல்வது உரிமையே தவிர சலுகையல்ல

2 mins read
307d342a-4e8d-4c23-ac80-01e4df89ef3e
மலாக்கா மற்றும் சிங்கப்பூர் நீரிணை வழியாக நாளொன்றுக்கு ஏறத்தாழ 23.2 மில்லியன் பீப்பாய் எண்ணெய் கொண்டுசெல்லப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில், அனைத்துலகக் கடல்வழிப் பாதைகளில் தடையின்றி பயணம் செய்வது உரிமையே தவிர சலுகையன்று என்று திங்கட்கிழமை (ஏப்ரல் 27) ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் சிங்கப்பூர் தெரிவித்தது.

“சிறிய தீவு நாடான சிங்கப்பூர், அனைத்துலகக் கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் நீரிணைகளில் எந்தவொரு பயணமும் அனைத்துலகச் சட்டத்தின்கீழ் ஓர் உரிமையாகும். அதற்காகப் பணம் செலுத்தவோ அல்லது பேரம் பேசவோ அது சலுகை அல்ல என்பதே சிங்கப்பூரின் நிலைப்பாடு,” என்று கடல்வழிப் பாதைகளின் பாதுகாப்பு தொடர்பாக உயர்மட்ட ஐநா விவாதத்தில் பேசிய வெளியுறவு துணையமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.

“உலகின் ஒரு பகுதியில் அனைத்துலகச் சட்டம் மீறப்படுவது, தவிர்க்க முடியாமல் மற்ற அனைத்துக்கும் ஓர் ஆபத்தான எடுத்துக்காட்டாக அமைந்துவிடும்,” என்று அவர் கூறினார்.

வழக்கமாக உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கைக் கப்பல்கள் ஏற்றிச் செல்லும் கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை, பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களுடன் ஈரானில் வெடித்த போரைத் தொடர்ந்து பேரளவில் மூடப்பட்டுள்ளது.

போர்நிறுத்தம் முழு அளவிலான சண்டையை நிறுத்தியிருந்தாலும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று ஈரானியப் புரட்சிப் படை தெரிவித்துள்ளது. அதே வேளையில், ஈரானின் துறைமுகங்களை அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

மலாக்கா நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குச் சுங்கக்கட்டணம் விதிக்கும் யோசனையைக் கடந்த வாரம் இந்தோனீசிய நிதி அமைச்சர் புர்பயா யுடி சதேவா முன்வைத்தார். பின்னர், அவ்வாறு செய்யும் எண்ணம் தனது நாட்டிற்கு இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

மலாக்கா மற்றும் சிங்கப்பூர் நீரிணை வழியாக நாளொன்றுக்கு ஏறத்தாழ 23.2 மில்லியன் பீப்பாய் எண்ணெய் கொண்டுசெல்லப்படுகிறது. இது ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த 20.9 மில்லியன் பீப்பாயைவிட அதிகமாகும் என்றும் அதன் மிகக் குறுகிய பகுதி இரண்டு கடல் மைல் அகலத்தை மட்டுமே கொண்டுள்ளது என்றும் திரு ஸுல்கர்னைன் தெரிவித்தார்.

“சிங்கப்பூர் தெளிவான, உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இதில் உள்ள அபாயங்கள் வெறுமனே கருத்தியல் சார்ந்தவை அல்ல. போக்குவரத்துப் பயணத்துக்கான உரிமை நிலைநிறுத்தப்படாவிட்டால், நீரிணைகளில் அனைத்துலகக் கப்பல் போக்குவரத்து முற்றிலும் சீர்குலைக்கப்படலாம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்