இடர்கள் மத்தியிலும் தேசத்தை பாதுகாப்பாக பேணிய உள்துறைக் குழு

போதைப் புழக்கம் சார்ந்த சவால்கள் நீடித்தன; குற்றச் செயல்கள் குறைந்தன. தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகளவில் இருந்தன. எனினும் கடந்த ஆண்டு உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் திகழ்ந்தது.

இடர்கள் மத்தியிலும் தேசத்தை பாதுகாப்பாக பேணிய உள்துறைக் குழு

2 mins read
கடந்த 2025ம் ஆண்டில் பாதுகாப்புமிக்க நாடாகச் சிங்கப்பூர் இருந்துள்ளது; தீச்சம்பவம் சார்ந்த உயிரிழப்பு விகிதம் குறைந்த அளவில் பதிவானது.
6089e881-4cb8-49de-b16a-82a1352c363b
கடந்த 2025ம் ஆண்டில் பாதுகாப்புமிக்க நாடாக சிங்கப்பூர் இருந்துள்ளது.பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் உள்துறைக் குழு நாட்டை பத்திரமாகக் காத்துக்கொண்டது என்று கூறியது உள்துறை அமைச்சின் வருடாந்திர அறிக்கை. - கோப்புப் படம்: எஸ்பிஎச்

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் உள்துறைக் குழு நாட்டைப் பாதுகாப்பாகக் கட்டிக்காத்தது என்று கூறியது உள்துறை அமைச்சின் வருடாந்தர அறிக்கை.

குற்றச்செயல்கள், விபத்துகள், குடிநுழைவு, போதைப்பொருள், மோசடிகள், தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தென்பட்ட போக்கு, அத்தகைய சூழல்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அதன்மூலம் நிலவிய பாதுகாப்புமிக்க சூழல் ஆகியவற்றை விவரிக்கும் வகையிலான அந்த அறிக்கையைத் திங்கள்கிழமை (பிப்ரவரி 9) வெளியிட்டது உள்துறை அமைச்சு.

முன்னேற்றம் தந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

அதன்படி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வாயிலாகக் குற்றச்செயல்கள் குறைந்ததாக அறிக்கை கூறியது. கடைத் திருட்டு, பாலியல் ரீதியாக பிறரை ரகசியமாகப் படம் பிடித்தல் சார்ந்த குற்றச் செயல்கள் குறைந்தன.

மேலும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சந்தித்த வாகனங்கள், தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் ஆகியவற்றால் நிகழ்ந்த தீச்சம்பவங்கள் எண்ணிக்கையும் குறைந்தது என்றும் அமைச்சின் அறிக்கை கூறியது.

அறிக்கை விவரித்த மற்றுமொரு தகவல், குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் சார்ந்தது.

அதன்படி 2024ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க ஆணையம் 2025ஆம் ஆண்டில் அதிக அளவிலான பயணிகள் வரவைச் சந்தித்தது.எனினும், இதற்கு மத்தியிலும் சோதனைச் சாவடிகளில் முன்னெச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்பட்ட பற்பல நடவடிக்கைகள், செயல்திறமிக்க வகையில் அமலாக்கம் கண்டதால் எல்லைப் பாதுகாப்பு திறம்பட இருந்தது என்று குறிப்பிட்டது அறிக்கை.

அறிக்கை எடுத்துரைத்த அக்கறை

உலகளாவிய மற்றும் வட்டார அளவில் போதைப்பொருள் சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருவதாகத் தெரிவித்த அறிக்கை வெளிநாடுகளில் சட்டவிரோத போதைப்பொருள் சந்தைகள் தொடர்ந்து விரிவடைந்து வருவதையும் பதிவு செய்திருந்தது.

மேலும் இளம் வயது போதைப் புழங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலைக்குரியது. 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025ல் போதைப்பொருள் சார்ந்த செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 30 வயதிற்குட்பட்ட இளையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டது அறிக்கை.

எனினும், இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தொடர்ந்து தீங்கிலிருந்து மக்களைக் காக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அறிக்கை உறுதிகூறியது.

உடல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் குற்றங்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. அதேவேளையில், மோசடிப் புகார்கள் சார்ந்த வழக்குகள் மற்றும் மோசடிகளால் இழக்கப்பட்ட மொத்தத் தொகை ஆகியவை குறைந்துள்ளன என்றும் அறிக்கையின் புள்ளி விவரங்கள் கூறின.

2025ஆம் ஆண்டில் வேகமாக வாகனம் ஓட்டியது சார்ந்த விதிமீறல் வழக்குகள் அதிகரித்து வருவதும், அவை கவலைக்குரியன என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிக அளவில் நீடிப்பதைக் குறிப்பிட்ட அமைச்சின் அறிக்கை, அவற்றுள் தீவிரவாதச் சித்தாந்தத்தினால் ஈர்க்கப்படுவோர் சார்ந்த சம்பவம் முக்கிய இடத்தை வகிப்பதாகத் தெரிவித்தது.

மேலும், இளையர்கள் இதில் ஈடுபடுவது கவலைக்குரியது என்று சுட்டிய அமைச்சு, இத்தகைய மனப்போக்குடன் இருக்கும் இளையர்களைக் காண நேர்ந்தால் அவற்றிலிருந்து அவர்களைக் காக்க பொதுமக்களின் உதவியையும் நாடுவதாகச் சொன்னது.

குறிப்புச் சொற்கள்