தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்று மாதத் தொடர் உயர்வுக்குப் பிறகு மே மாதம் சில்லறை விற்பனை சரிவு

2 mins read
43ff0c98-2d33-4f27-b959-5de072632387
ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தின் சில்லறை விற்பனை வருமானம் 0.2 விழுக்காடு குறைவு.  - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மூன்று மாதங்களாகத் தொடர்ந்து அதிகரித்துவந்த சில்லறை விற்பனை, ஒட்டுமொத்த விற்பனைச் சரிவினால் மே மாதம் வீழ்ந்தது.

ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தின் சில்லறை விற்பனை வருமானம் 0.2 விழுக்காடு குறைவு. முன்னதாக, ஏப்ரல் மாதத்தின் ஒட்டுமொத்த வருமானம் மார்ச் மாதத்தைவிட 0.3 விழுக்காடு அதிகமாக இருந்தது.

ஆனால், சென்ற ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு மே மாதத்தில் சில்லறை விற்பனை 1.8 விழுக்காடு வளர்ச்சி அடைந்து, மொத்தமாகக் கிட்டத்தட்ட $4 பில்லியனை எட்டியதாகப் புள்ளிவிவரத் துறை புதன்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மே மாதத்தின் சில்லறை விற்பனையில் கிட்டத்தட்ட 11.8 விழுக்காடு இணையம்வழி நடந்த விற்பனை. இது ஏப்ரல் மாதத்தின் 11.9 விழுக்காட்டைவிடச் சற்று குறைவு.

மோட்டார் வாகனங்களைச் சேர்க்காவிட்டால், மே மாதத்தின் சில்லறை விற்பனை சென்ற ஆண்டைவிட 1.8 விழுக்காடு அதிகம். ஆனால், ஏப்ரல் (4.3 விழுக்காடு), மார்ச் (4 விழுக்காடு) மாதங்களின் அதிகரிப்பைவிடக் குறைவு.

சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், மதுபானம், ஒப்பனைப் பொருள்கள், குளியல் பொருள்கள் (24.9 விழுக்காடு), மருத்துவப் பொருள்கள் (13.1 விழுக்காடு) ஆகியவற்றின் சில்லறை விற்பனையே மே மாதத்தில் ஆகப்பெரிய உயர்வைக் கண்டன.

தீர்வையில்லாக் கடைகளில் விற்கப்படுபவை உட்பட, இந்தப் பொருள்களுக்கு அதிக தேவை இருந்தது இதற்குக் காரணம்.

உடைகள், காலணிகள் ஆகியவற்றின் விற்பனை வருமானம் மே மாதத்தில் 6.4 விழுக்காடும் பொழுதுபோக்குப் பொருள்களின் விற்பனை வருமானம் 5.6 விழுக்காடும் குறைந்தன.

ஆனால், கண்பார்வை பொருள்கள், புத்தகங்கள், கணினிகள், தொலைத்தொடர்புச் சாதனங்கள் ஆகியவற்றின் விற்பனை மாத அடிப்படையில் 2.4 விழுக்காடும், அறைகலன்கள், வீட்டுச் சாதனங்கள் ஆகியவற்றின் விற்பனை 2.9 விழுக்காடும் அதிகரித்தன.

பெட்ரோல் நிலையங்களில் சென்ற ஆண்டைவிட விற்பனை வருமானம் 18.2 விழுக்காடு குறைந்தது. பெட்ரோல் விலை குறைவாக இருந்தது இதற்கு ஒரு காரணம்.

இந்நிலையில், உணவு, பானத் துறையின் விற்பனை சென்ற ஆண்டைவிட 8.5 விழுக்காடு கூடியது. ஆனால், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தின் 15.3 விழுக்காட்டு உயர்வைவிட இது குறைவு.

உணவு விநியோக நிறுவனங்களே ஆக அதிகமாக 56.3 விழுக்காடு விற்பனை அதிகரிப்பைப் பதிவு செய்தன. விமானப் பயணங்களுக்கு அதிகமான உணவு விநியோகம் தேவைப்பட்டது இதற்கு முக்கியக் காரணம்.

இந்த அதிகரிப்பு, ஏப்ரல் மாதத்தின் 61.4 விழுக்காடு உயர்வையும் மார்ச் மாதத்தின் 77.4 விழுக்காடு உயர்வையும்விடக் குறைவு.

குறிப்புச் சொற்கள்