சிங்கப்பூரில் தொடர்ந்து ஆறாவது மாதமாக ஜூலையில் சில்லறை விற்பனை அதிகரித்துள்ளது. இருப்பினும் முன்னுரைக்கப்பட்டதைவிட அது குறைவாகவே வளர்ச்சி கண்டுள்ளது.
ஆண்டு அடிப்படையில், ஜூலை மாத சில்லறை விற்பனை, 1.1 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது. ஆனால் அது 2.1 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று புளூம்பெர்க் கருத்துக் கணிப்பில் பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்திருந்தனர்.
ஒப்புநோக்க, மே மாதம் 1.8 விழுக்காட்டு வளர்ச்சியும் பிப்ரவரியில் 12.5 விழுக்காட்டு வளர்ச்சியும் பதிவாயின.
ஜூலையில், மோட்டார் வாகனங்கள் தவிர்த்து மற்ற பொருள்களின் சில்லறை விற்பனை 0.4 விழுக்காடு உயர்ந்தது. ஜூன் மாதம் அது 2.5 விழுக்காடாகப் பதிவானது. சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ஜூலை மாதம் வாகன விற்பனை 7.3 விழுக்காடு அதிகரித்ததால், ஒட்டுமொத்த சில்லறை விற்பனை 0.6 விழுக்காடு உயர்ந்தது.
உணவு, மதுபானத் துறையில் சில்லறை விற்பனை 21 விழுக்காடு வளர்ச்சி கண்டது. மதுபானப் பொருள்களுக்கான தேவை அதிகரித்தது இதற்குக் காரணம். சிறிய கடைகளில் விற்பனை 7.4 விழுக்காடு உயர்ந்தது.
பெட்ரோல் நிலையங்களில் ஜூலை மாத விற்பனை 16.1 விழுக்காடு குறைந்தது. பெட்ரோல் விலை குறைந்தது இதற்குக் காரணம்.
ஜூலை மாத சில்லறை விற்பனையின் மதிப்பு மொத்தம் $3.9 பில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதில் 12.6 விழுக்காடு இணையவழி சில்லறை விற்பனை என்று குறிப்பிடப்பட்டது.

