வாசிப்புத் திறனில் உலகின் ஆகச் சிறந்தவர்கள்; சிங்கப்பூர் தொடக்கநிலை மாணவர்கள்

வாசிப்புத் திறனில் உலகின் ஆகச் சிறந்தவர்கள்; சிங்கப்பூர் தொடக்கநிலை மாணவர்கள்

2 mins read
41ee8000-c3b2-4fc6-b121-0e76002a19ad
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வாசிப்புத் திறனில் உலகின் ஆகச் சிறந்தவர்களாக சிங்கப்பூரின் தொடக்கநிலை 4 மாணவர்கள் உருவெடுத்துள்ளனர்.

'அனைத்துலக வாசிப்புத் திறனில் முன்னேற்றம்' எனும் ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அடித்தள, உயர்நிலை வாசிப்புத் திறனைப் பொறுத்தமட்டில், மற்ற நாட்டு மாணவர்களைவிட இங்குள்ள மாணவர்கள் வலுவாக இருப்பது ஆய்வில் தெரிவந்துள்ளது.

மின்னிலக்க பனுவல்களை வாசிக்கவும் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து எளிய முறையில் முடிவெடுக்கவும், யோசனைகளை எழுப்பவும் இங்குள்ள மாணவர்களால் முடிகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த ஆய்வு, தொடக்கநிலை 4 மாணவர்களின் வாசிப்புத் திறனையும் கருத்தறிதலையும் மதிப்பிடுகிறது.

உலகம் முழுவதிலிருந்தும் மொத்தம் 57 கல்வி முறைகள் இந்த ஆய்வில் பங்கெடுத்தன. கல்விச் சாதனை மதிப்பீட்டுக்கான அனைத்துலகைச் சங்கம் ஆய்வுக்கு ஆதரவு நல்கி, ஆய்வு முடிவுகளையும் வெளியிட்டது. சிங்கப்பூர் கல்வி அமைச்சு ஆய்வு முடிவு குறித்த விவரங்களை வழங்கியது.

இந்த ஆய்வு முழுமையாக இணையத்தில் நடத்தப்பட்டது இதுவே முதன்முறை. ஆனால், ஆய்வைக் காகித வடிவில் செய்வதா இணையத்தில் செய்வதா என்பது குறித்து முடிவெடுக்க கல்வி முறைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

2021 ஆய்வில் அயர்லாந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஹாங்காங், ரஷ்யா, வடஅயர்லாந்து ஆகியவை அதற்கு அடுத்தடுத்த இடங்களில் வந்தன. கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக தரவுகளைத் தொகுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் ஆய்வு முடிவுகள் இவ்வாண்டுதான் வெளியிடப்பட்டன.

இதற்கு முன்னதாக 2016ல் நடத்தப்பட்ட ஆய்வில் 58 கல்வி முறைகள் பங்கெடுத்தன. அதில் சிங்கப்பூருக்கு இரண்டாவது இடம் கிடைத்தது. ரஷ்யா அப்போது முதலிடம் பிடித்தது.

2020 அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 183 தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 6,719 தொடக்கநிலை 4 மாணவர்கள் பங்கேற்றனர்.

உலகம் முழுவதும் ஏறக்குறைய 400,000 மாணவர்கள் ஆய்வில் பங்கெடுத்தனர்.

கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலிலும் சிங்கப்பூர் மாணவர்களின் வாசிப்புத் திறன், 2016ல் இருந்ததைவிட மேம்பட்டுள்ளது. சராசரி மதிப்பெண் 576லிருந்து 587ஆக உயர்ந்துள்ளது.

2001ல் இந்த ஆய்வு முதன்முறையாக தொடங்கப்பட்டதில் இருந்து 20 ஆண்டு காலத்தில் மாணவர்கள் நிலையான முன்னேற்றம் கண்டுள்ள ஒரே கல்வி முறை சிங்கப்பூர்தான் என்று கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

கடந்த 20 ஆண்டு காலமாக ஆங்கில மொழி கற்பித்தலிலும் பாடத்திட்டத்திலும் செய்யப்பட்டு உள்ள மாற்றங்கள், உதவி தேவைப்படும் மாணவர்களுக்குக் கூடுதல் எழுத்தறிவு ஆதரவு வழங்கப்பட்டிருப்பது, பெருந்தொற்று காலத்தில் கற்றல் தொடர்வதை உறுதிசெய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இந்த முன்னேற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்