தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நம்பகமான செய்திக்குப் பொது ஊடகங்களை நாடும் சிங்கப்பூரர்கள்: அமைச்சர் டியோ

2 mins read
6154c25b-4041-4629-9d8b-b565a49a9569
சிங்கப்பூரின் பொது ஊடகம் மீதான நம்பிக்கை சிங்கப்பூரர்களிடையே தொடர்ந்து அதிகமாக இருப்பதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

நம்பகமான செய்திக்குப் பொது ஊடகங்களைப் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் நாடுவதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (மார்ச் 7), நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது அவர் இதுகுறித்துப் பேசினார்.

நம்பகமான செய்திக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சிஎன்ஏ ஆகியவற்றின் இணையப்பக்கங்களைச் சிங்கப்பூரர்கள் அதிகம் நாடுவதாக அவர் கூறினார்.

அவற்றில் பதிவிடப்படும் செய்திகளை வாரந்தோறும் 40 விழுக்காட்டுக்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் வாசிக்கின்றனர்.

சிங்கப்பூரின் பொது ஊடகம் மீதான நம்பிக்கை சிங்கப்பூரர்களிடையே தொடர்ந்து அதிகமாக இருப்பதாக அமைச்சர் டியோ தெரிவித்தார்.

சிஎன்ஏ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சை நம்பும் சிங்கப்பூரர்களின் விழுக்காடு முறையே 74 மற்றும் 73 என்று அவர் கூறினார்.

மற்ற நாடுகளில் பொது ஊடகம் மீது அந்நாட்டு மக்களிடையே உள்ள நம்பிக்கை குறைந்துள்ள நிலையில், சிங்கப்பூரில் நிலைமை வேறுபடுவதை அமைச்சர் சுட்டினார்.

இதற்கிடையே, எஸ்பிஎச் மீடியாவின் செயலாக்கம் குறித்தும் அமைச்சர் டியோ நாடாளுமன்றத்தில் பேசினார்.

எஸ்பிஎச் மீடியா அதன் செயலாக்க இலக்குகள் அனைத்தையும் 2024ஆம் ஆண்டில் அடையவில்லை.

இருப்பினும், செயலாக்க இலக்குகளைக் குறைத்துக்கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொள்ளவில்லை என்றார் திருவாட்டி டியோ.

எஸ்பிஎச் மீடியா 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூர்வாசிகளில் 70 விழுக்காட்டினரைத் தொடர்ந்து சென்றடைந்தாகவும் இந்த நிலையைத் தக்கவைத்துக்கொள்ளவும் சிங்கப்பூரர்களுக்குத் தொடர்புடைய ஊடகமாகத் தொடர்ந்து விளங்கவும் அது கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அமைச்சர் டியோ கூறினார்.

இளையர், தாய்மொழி ஊடகங்களை நாடுவோர் எண்ணிக்கை குறைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

எஸ்பிஎச் மீடியாவின் மின்னிலக்கச் சந்தா அச்சிடப்படும் செய்தித்தாள்களின் சந்தாவைவிட 35 விழுக்காடு அதிகம் என்று அமைச்சர் டியோ கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இது 20 விழுக்காடாக இருந்தது என அவர் தெரிவித்தார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சைக் காட்டிலும் சிஎன்ஏ செய்தி நிறுவனம் உள்ளூர் விவகாரங்கள் குறித்து அதிக செய்திகளை வெளியிடுவதாக ஆங்கிலத்தில் வெளியிடப்படும் உள்ளூர்ச் செய்திகளை உன்னிப்பாகக் கவனிப்பவர்களிடையே பேச்சு நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங் தமது கேள்வியில் குறிப்பிட்டார்.

“உள்ளூர் ஊடகங்கள் பற்றி சிங்கப்பூரர்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்ள தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு உள்ளூர் அளவில் ஆய்வுகளை நடத்துகிறதா? ஆய்வுகள் நடத்தப்பட்டால், எதிர்பார்த்த அளவுக்கு, திருப்திகரமாகச் செயல்படாத ஊடகங்களுக்கு வரி செலுத்துவோரின் பணத்தைக் கொண்டு நிதி உதவி வழங்கும் முடிவு எவ்வாறு எடுக்கப்படுகிறது?” என்று திரு சிங் வினவினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் டியோ, இந்த விவகாரம் குறித்துத் திரித்துப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சிஎன்ஏ, சிங்கப்பூரின் தேசிய செய்தி ஒளிபரப்பாளராகவும் மின்னிலக்கச் செய்தி ஒளிவழியாகவும் திகழ்கிறது என்றார் அமைச்சர் டியோ.

“எஸ்பிஎச் மீடியாவில் உள்ள வெவ்வேறு செய்திப் பிரிவுகளில் பெரும்பாலானவை அச்சு வடிவில் செய்திகளை வெளியிடுகின்றன. அவற்றுடன் மின்னிலக்க வடிவிலும் செய்திகளை அவை வெளியிடுகின்றன. எஸ்பிஎச் மீடியாவின் செய்தித்தாள்களில் வெளியிடப்படும் செய்திகள் பதிவு செய்யப்படுகின்றன. அவை தேசிய நாளிதழ்களாகத் திகழ்கின்றன,” என்று அமைச்சர் டியோ விளக்கம் அளித்தார்.

குறிப்புச் சொற்கள்