தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் (ஆசியான்) உறுப்பினர்களாக இருக்கும் அண்டை நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பசுமை மின்சாரத்தின் அளவை அதிகரிக்க சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது.
ஏனெனில், பருவநிலை இலக்குகளை அடைய மின் உற்பத்தி நிலையங்கள் கரிமத்தை அகற்றும் வழிமுறைகளை ஆராய சிங்கப்பூர் அறிவுறுத்தியிருப்பதால் நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய அண்டை ஆசியான் நாடுகளை நாட அது முடிவெடுத்துள்ளது.
பசுமை எரிசக்திக்கான தேவை அதிகரித்து இருப்பதாலும் எரிசக்தியைச் சேமிக்கத் தேவைப்படும் இடவசதி இங்கு குறைவாக இருப்பதாலும், ஆசியான் நாடுகளுடன் எரிசக்திக் கட்டமைப்பு இணைப்புகளை மேம்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்த சிங்கப்பூர் நடவடிக்கை எடுத்து வருவதாக சிங்கப்பூர் எரிசக்திச் சந்தை ஆணையத்தின் வெளியுறவுப் பிரிவின் இயக்குநர் ஜோனதன் கோ கூறினார்.
2035ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் எரிசக்தித் தேவையில் மூன்றில் ஒரு பங்கு இறக்குமதி செய்யும் பசுமை மின்சாரத்தால் பூர்த்தி செய்யப்படுவதை இலக்காகத் தீவு கொண்டிருப்பதாகக் கடந்த மாதம் அளித்த நேர்காணல் ஒன்றில் திரு கோ தெரிவித்தார்.
சிங்கப்பூரின் பருவநிலை மாற்றத்திற்கான உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான அண்மை முயற்சியாக இத்திட்டம் கருதப்படுகிறது. 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், 2050ஆம் ஆண்டுக்குள் நிகர அளவில் கரிம வெளியீடற்ற நிலையை அடைய சிங்கப்பூர் இலக்கு நிர்ணயித்துள்ளது.
சிங்கப்பூரின் மொத்த கரிம வெளியேற்றத்தில் சுமார் 40 விழுக்காட்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலையங்கள் வெளியேற்றுகின்றன. அதனால், தீவின் கரிம வெளியேற்ற இலக்கை அடைய மின்சார உற்பத்தித் துறையில் கரிமத்தை அகற்றுவது மிகவும் முக்கியம்.
தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் இருக்கும் மின்கட்டமைப்பு வழியாக லாவோசிலிருந்து 100 மெகாவாட் நீர்மின்சாரத்தை இறக்குமதி செய்ய 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூர் ஒப்புக்கொண்டது.
பசுமை எரிசக்திக்காக அண்டை ஆசியான் நாடுகளை சிங்கப்பூர் நாடியது அதுவே முதல்முறை.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு செப்டம்பர் முதல் மலேசியா சிங்கப்பூருக்கு மின்சாரம் வழங்கத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.