குறைவான கடல்துறை எரிபொருளை விற்கும் சிங்கப்பூர்

குறைவான கடல்துறை எரிபொருளை விற்கும் சிங்கப்பூர்

2 mins read
85a15e1b-1034-44b7-82e3-19ca184025a8
பாசிர் பஞ்சாங் துறைமுகம். - கோப்புப் படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

உலகின் ஆகப் பெரிய கப்பல் எரிபொருள் நிரப்பு மையமான சிங்கப்பூர், ஆண்டு அடிப்படையில் தொடர்ந்து இரண்டாவது மாதமாகக் குறைவான அளவில் கடல்துறை எரிபொருளை விற்றது.

ஆண்டு அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் காணப்பட்ட சரிவைவிட மே மாதம் சரிவு அதிகமாக இருந்தது.

ஆண்டு அடிப்படையில் மே மாதம் சிங்கப்பூர் விற்ற கடல்துறை எரிபொருள் அளவு 6.8 விழுக்காடு சரிந்து 4.5 மில்லியன் டன்னாகப் பதிவானது. இந்தச் சரிவு, ஏப்ரலில் பதிவான 1.2 விழுக்காட்டைவிட அதிகமாகும்.

அதேவேளை, கடந்த ஏப்ரலில் விற்கப்பட்ட எரிபொருள் அளவைக் காட்டிலும் மே மாதம் கூடுதல் அளவு எரிபொருள் விற்கப்பட்டது. ஏப்ரலில் 4.4 மில்லியன் டன் கடல்துறை எரிபொருள் விற்கப்பட்டது. அது, 14 மாதங்களில் இல்லாத அளவு குறைவான கடல்துறை எரிபொருளாகும்.

புள்ளிவிவரங்கள்

சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் திங்கட்கிழமை (ஜூன் 15) வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இத்தகவல்கள் தெரியவந்தன. கூடுதல் எண்ணெய்க் கப்பல்கள் சிங்கப்பூர் வந்துள்ளபோதிலும் விற்பனை குறைவாகப் பதிவாகியுள்ளது.

சீனாவின் ஸூ‌ஷான் நகரில் மேலும் குறைவான விலையில் கடல்துறை எரிபொருள் விற்கப்படுவதே இங்கு விற்பனை குறைந்திருப்பதற்குக் காரணமாக இருக்கும் என்று சில கடல்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மத்திய கிழக்குப் பூசலால் பாதிப்பு

கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கப்பல்களின் எரிபொருள் நிரப்புவதற்கான கட்டணங்கள் கணிசமான அளவு அதிகரித்தன.

இயல்புநிலையில், உலகளவில் கொண்டுசெல்லப்படும் கச்சா எண்ணெய் அளவில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கொண்டுசெல்லப்பட்டது அதற்குக் காரணமாகும்.

இப்போது விலை குறைந்துள்ளது. இருந்தாலும், மத்திய கிழக்குப் பூசல் தொடங்குவதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் கட்டணங்கள் இன்னமும் அதிகமாகவே இருந்துவருகின்றன.

சிங்கப்பூர் பயன்படுத்தும் கடல்துறை எரிபொருள் பல்வேறு பகுதிகளிலிருந்து தருவிக்கப்படுவதாகவும் தேவையைப் பூர்த்திசெய்யப் போதுமான எரிபொருள் இருப்பதாகவும் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் கடந்த மார்ச் மாதம் பிஸ்னஸ் டைம்சிடம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்துறைமுகம்எரிபொருள்கடல்துறைஎண்ணெய்கப்பல்சீனா