தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸா மக்களின் பசியைப் போக்க சிங்கப்பூர் 1,000 டன் அரிசியை அனுப்புகிறது

2 mins read
9ca007a3-0ab5-4cf9-9248-1cb82d8ab8c0
(இடமிருந்து) பாலஸ்தீன அமைப்புக்கான சிங்கப்பூரின் பிரதிநிதி ஹவாஸி டயிப்பி, வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் சிங்கப்பூரின் மனிதாபிமான உதவித் தொகுப்பை, சிங்கப்பூரில் உள்ள ஐக்கிய அரபு சிற்றரசுகள் தூதரகத்தின் அதிகாரி டாபியா ஜுமா சலீம், சிங்கப்பூரில் உள்ள சைபிரஸ் தூதரகத்தின் கெளரவத் தூதர் ராஜா போஸ் ஆகியோரிடம் வழங்குகின்றனர். - படம்: பெரித்தா ஹரியான்

காஸாவில் நிகழும் உணவுப் பாதுகாப்பின்மைக்கு உதவும் பொருட்டு, சிங்கப்பூர் 1,000 டன் அரிசி, 300 டன் டின்னில் அடைக்கப்பட்ட சாடின் ஆகியவற்றை அங்கு அனுப்புகிறது.

இது சிங்கப்பூர், காஸாவுக்கு அனுப்பும் நான்காவது மனிதாபிமான உதவித் தொகுப்பாகும். காஸா பள்ளத்தாக்கில் நிகழும் மனிதாபிமான நெருக்கடிக்கு உதவும் வகையில் சிங்கப்பூர் இதுவரை $17 மில்லியன் மதிப்புள்ள நன்கொடைகளை வழங்கியுள்ளது.

ஜூலை 22ஆம் தேதி மனிதாபிமான உதவித் தொகுப்பை வழங்கும் நிகழ்வில் பேசிய வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், “காஸாவில் நிகழும் சண்டை இப்போது ஒன்பதாவது மாதத்தை எட்டியுள்ளது. காஸாவின் மோசமான மனிதாபிமான சூழ்நிலையால் சிங்கப்பூரர்கள் ஆழ்ந்த துயரமும் வருத்தமும் அடைந்துள்ளனர்.

“நாம் அனைவரும் நாள்தோறும் அறிந்துவரும் காஸா மக்களின் அவலநிலை நமது இதயங்களைப் பிழிவதாக அமைந்துள்ளன,” என்று கூறினார்.

2023 நவம்பரில் சிங்கப்பூர் தனது முதலாவது மனிதாபிமான உதவித் தொகுப்பை காஸாவுக்கு அனுப்பியது. அதில் மருந்துவப் பொருள்களும் உணவுப் பொருள்களும் இருந்தன. அதே மாதத்தில் சிங்கப்பூர் அரசாங்கம் அங்குள்ள மக்களுக்காக, 10 டன் எடையுள்ள உதவிப் பொருள்களை சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை விமானம் மூலம் அனுப்பியது.

2024 மார்ச்சில், சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை விமானங்கள் மூலம் சென்ற 69 அதிகாரிகள், 59,000 பேர் சாப்பிடக்கூடியதற்குச் சமமான 20 டன் உணவுப் பொருள்களை அங்கு கொண்டு சென்றனர்.

இப்போது வழங்கப்பட்டுள்ள அரிசியும் சாடினும் சிங்கப்பூரிலிருந்து சைபிரசுக்குக் கப்பல் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் காஸாவுக்கு அனுப்பப்படும்.

ஜூலை 22ஆம் தேதியன்று, பாலஸ்தீன அமைப்புக்கான சிங்கப்பூரின் பிரதிநிதி ஹவாஸி டயிப்பி, வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் சிங்கப்பூரின் மனிதாபிமான உதவித் தொகுப்பை, சிங்கப்பூரில் உள்ள ஐக்கிய அரபு சிற்றரசுகள் தூதரகத்தின் அதிகாரி டாபியா ஜுமா சலீம், சிங்கப்பூரில் உள்ள சைபிரஸ் தூதரகத்தின் கெளரவத் தூதர் ராஜா போஸ் ஆகியோரிடம் வழங்கினர்.

“இந்த ஆகக் கடைசி உதவித் தொகுப்பு காஸா மக்களின் துன்பங்களைப் போக்க சிங்கப்பூரின் தொடர்ச்சியான மற்றும் உறுதியான உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. போர்நிறுத்த உடன்பாட்டை எட்ட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இது அனைத்துப் பிணைக் கைதிகளையும் விடுவிக்க அனுமதிக்கும். மேலும் மனிதாபிமான உதவிப் பொருள்கள் பாதிக்கப்பட்ட மக்களையும் சென்றடைய வழிவகுக்கும்,” என்று டாக்டர் விவியன் தெரிவித்தார்.

“இந்தக் கடினமான காலங்களில் நமது பாலஸ்தீன நண்பர்களுக்கு சிங்கப்பூர் தொடர்ந்து உதவுவதற்கான நடைமுறை வழிகளை நாங்கள் தொடர்ந்து கண்டுபிடிப்போம்,” என்றும் அமைச்சர் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்